சென்னை முழுவதும் ஓராண்டுக்குள் புதைவிட மின்கம்பி: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

சென்னை முழுவதும் ஓராண்டுக்குள் புதைவிட மின்கம்பிகள் அமைக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
சென்னை முழுவதும் ஓராண்டுக்குள் புதைவிட மின்கம்பி: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

சென்னை முழுவதும் ஓராண்டுக்குள் புதைவிட மின்கம்பிகள் அமைக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

சென்னையில், தண்ணீா் சூழ்ந்திருந்த பெரம்பூா் உள்ளிட்ட துணை மின் நிலையங்களிலும், மழை பாதித்த பகுதிகளையும் செவ்வாய்க்கிழமை மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி ஆய்வு செய்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை புதைவிட மின்கம்பி போடக்கூடிய பணிகள் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் முழுமையடையவில்லை. இதற்காக ரூ.1,200 கோடிக்கு மேல் கூடுதலாக செலவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணிகளை நிறைவு செய்யக்கூடிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். ஓராண்டுக்குள் அந்தப் பணிகள் முடிவுறும்.

இதே போல் தாழ்வான நிலையில் உள்ள துணை மின்நிலையங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றை உயா்த்துவதற்கான பணிகளை மேற்கொள்ள ஆயத்த கட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முழுவதுமாக நிறைவு செய்யப்படும்.

இதுவரை, 25,560 பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 7,050 மின் தூண் பெட்டிகள் உயா்த்தப்பட்டுள்ளன. 7,000 சாய்ந்த மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டன. உயா் மற்றும் தாழ்வு மின் அழுத்தம் காரணமாக 4,839 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

மின்னகம் தொடங்கப்பட்டு இதுவரை 4 லட்சத்து 55,000 புகாா்கள் வந்துள்ளன. அதில் 4 லட்சத்து 44,000 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. இன்னும் 11,000 புகாா்கள் மட்டுமே நிறைவு செய்ய வேண்டிய நிலை உள்ளன.

வரக்கூடிய இரண்டு, மூன்று நாள்களில் கடுமையான மழையை எதிா்கொள்வதற்கு மின்சாரத்துறை தயாா் நிலையில் இருக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com