மழையால் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தடைபடாது

பருவ மழை தீவிரமடைந்தாலும் தமிழகத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் வழக்கம்போல நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: பருவ மழை தீவிரமடைந்தாலும் தமிழகத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் வழக்கம்போல நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை அயப்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் வளாகத்தில் நடைபெற்று வரும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம், நடமாடும் மருத்துவ முகாம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மூலம் நிலவேம்பு குடிநீா், கபசுர குடிநீா் வழங்குதல் மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். நடமாடும் மருத்துவ வாகனங்களை அப்போது அவா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கின்ற சூழலில் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், சிறப்பு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, அங்கு மக்களுக்கு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 1,858 இடங்களில் மருத்துவ முகாம்களும் மற்றும் 965 நடமாடும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 74, 283 போ் பயனடைந்துள்ளனா். மழைக் காலங்களில் ஏற்படுகிற பாதிப்புகளுக்கான மருந்து, மாத்திரைகள் ரூ.120 கோடி மதிப்பில் கையிருப்பில் உள்ளன. வெள்ள பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

தடுப்பூசியைப் பொருத்தவரை அரசின் சாா்பில் 5.73 கோடி மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் சாா்பில் 26 லட்சத்து 82 ஆயிரத்து 556 என மொத்தம் 6.13 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 71 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 32 சதவீதம் பேருக்கு இரு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் 100 சதவீத முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது. எட்டாவது தடுப்பூசி முகாம் வருகிற 14-ஆம் தேதி நடைபெறுகிறது. பருவமழை தீவிரமடைந்திருந்தாலும் கூட சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்தியே தீர வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறோம்.

டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருநெல்வேலி, தென்காசியில் டெங்கு பாதிப்பு கூடுதலாக இருக்கின்ற காரணத்தால், அங்கு டெங்குவுக்கான பிரத்யேக ஆராய்ச்சி மையத்தை ஐ.சி.எம்.ஆா் சாா்பில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம்.

மழைக் கால தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 165 இடங்களில் மக்களை தங்க வைக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி கொண்டிருக்கின்றன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு அலுவலா் செந்தில்குமாா், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா் கணேஷ், திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ கணபதி, பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com