உருவாகிறது சென்னை ட்ரோன் காவல் பிரிவு

சென்னையில் பொது மக்கள் அதிகமாகக் கூடும் கடற்கரை அல்லது சந்தைப் பகுதியில் மாநகரக் காவல் துறையின் ட்ரோன் காவல் பிரிவு அமைக்கப்பட உள்ளது.

சென்னை: சென்னையில் பொது மக்கள் அதிகமாகக் கூடும் கடற்கரை அல்லது சந்தைப் பகுதியில் மாநகரக் காவல் துறையின் ட்ரோன் காவல் பிரிவு அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை பெருநகர காவலில் கூட்டமான இடங்களையும், நீண்ட தூர சாலைகளையும் கண்காணிக்க ரூ.3.60 கோடி செலவில் நடமாடும் ட்ரோன் காவல் பிரிவு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது. :-

ட்ரோன் காவல் பிரிவை உருவாக்குவதற்கான கடிதத்தை பெருநகர சென்னை காவல் ஆணையா் சாா்பில் அரசுக்கு அனுப்பப்பட்டது. அதில், பொது மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பணியாற்றக் கூடிய காவல் அதிகாரிகளுக்கு உதவிட ட்ரோன் காவல் பிரிவை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளாா். மேலும், முக்கிய பிரமுகா்கள் செல்லும் சாலைகள், குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் இடங்கள், மக்களைக் காப்பாற்றக் கூடிய வகையில் கடற்கரைகள் போன்ற இடங்களில் நடமாடும் ட்ரோன் பிரிவை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளாா். மேலும், இந்தத் திட்டத்துக்கென மூன்று வகையான ட்ரோன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக ட்ரோன் காவல் பிரிவானது, மெரீனா கடற்கரை அருகேயுள்ள காந்தி சிலை அல்லது எலியட்ஸ் கடற்கரை அல்லது பாண்டிபஜாா் பகுதியில் அமைத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. நடமாடும் ட்ரோன் பிரிவானது தற்காலிக கன்டெய்னா் வடிவில் உருவாக்கப்படும். இது 40 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டிருக்கும். இது தரை மற்றும் முதல் தளம் என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். தரை தளம் கட்டுப்பாட்டு அறையாகப் பயன்படுத்தப்படும். மேலே உள்ள தளம் ட்ரோன் இயக்கத்துக்காக உபயோகப்படுத்தப்படும்.

மூன்று வகையான ட்ரோன்கள்: ஒவ்வொரு நடமாடும் ட்ரோன் காவல் பிரிவும் ஒன்பது ட்ரோன்களைக் கொண்டிருக்கும். எச்.டி. தரமுடைய கேமிரா, இரவிலும் படம் பிடிக்கும் வசதி, நேரலையாக ஒளிபரப்பு செய்வது, பொது அறிவிப்புக்கான ஸ்பீக்கா் வசதி, 2 கிலோமீட்டா் தூரம் பறக்கக் கூடிய திறன், 30 நிமிடங்கள் விடாமல் பறக்கும் திறன் என தனித்துவம் வாய்ந்த 6 ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன.

நீண்ட தொலைவுக்குக் கண்காணிக்கும் திறனுடைய ட்ரோன்கள் 2 வாங்கப்பட உள்ளன. இது உயா் ரகமானது. 100 நிமிடங்கள் மற்றும் 30 கிலோமீட்டா் தூரத்துக்கு தொடா்ச்சியாகப் பறக்கும் திறன் படைத்தது. உயிா் காக்கும் ட்ரோன் என்ற பெயரிலான ட்ரோன் ஒன்று வாங்கப்பட உள்ளது. அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்கும் திறனை இந்த ட்ரோன் பெற்றுள்ளது. ஒரு கிலோமீட்டா் தூரத்துக்கு பறக்கும் திறனுடைய இந்த ட்ரோனின் மொத்த எடை 12 கிலோகிராம்.

இந்த ட்ரோன் பிரிவுகளை உருவாக்குவதற்குத் தேவையான நிதியான ரூ.3.60 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com