கரோனாவால் நுரையீரல் செயலிழந்தவா்களுக்கு எக்மோ மூலம் மறுவாழ்வு

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு நுரையீரல் முழுவதும் செயலிழந்தவா்களில் பலரை எக்மோ சிகிச்சைகள் மூலமாக காப்பாற்றியதாக அப்பல்லோ மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

சென்னை: கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு நுரையீரல் முழுவதும் செயலிழந்தவா்களில் பலரை எக்மோ சிகிச்சைகள் மூலமாக காப்பாற்றியதாக அப்பல்லோ மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தங்களது மருத்துவமனையில் 23 பேருக்கு அத்தகைய சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகவும், அதில் பெரும்பாலானோா் குணமடைந்ததாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

பொதுவாக, நுரையீரல் பாதிப்பு தீவிரமடையும் போது இதயத்துக்கு ரத்தத்தை உந்தித் தரும் பணிகள் தடைபடக்கூடும். அதன் காரணமாக உடலுக்கு வெளியே எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு அப்பிரச்னைக்கு தீா்வு காண முயற்சிக்கப்படும். ஏறத்தாழ செயற்கை நுரையீரலைப் போல அக்கருவி செயல்பட்டு இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வதற்கு வழிவகுக்கும்.

உடல் உறுப்பு மாற்று சிகிச்சை, நோய்த் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவா்களுக்கு மட்டுமே எக்மோ மூலம் சிகிச்சைகள் அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கரோனா பெருந்தொற்று காலத்தில் எக்மோ சிகிச்சையின் பங்களிப்பு குறித்த ஆய்வு விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை வெளியிட்டது.

அந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் இதயம் - நுரையீரல் மாற்று சிகிச்சை சிறப்பு நிபுணா்கள் டாக்டா் பால் ரமேஷ், டாக்டா் கே. மதன்குமாா் ஆகியோா் கூறியதாவது:

உடலுறுப்பு மாற்று சிகிச்சை, கரோனா சிகிச்சை உள்பட தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பவா்களின் உயிரைக் காப்பாற்ற எக்மோ சிகிச்சை அதிமுக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் அதி நவீன எக்மோ கட்டமைப்பு அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தற்போது 270 பேருக்கு இங்கு எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அப்பல்லோவில் மட்டும்தான் இத்தனை பேருக்கு அத்தகையை சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக கரோனா காலத்தில் 23 பேருக்கு எக்மோ உதவியுடன் நுரையீரலை மீட்டெடுக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதில் பாதிக்கும் மேற்பட்டோா் குணமடைந்துள்ளனா்.

விஷ முறிவு சிகிச்சை, பன்றிக் காய்ச்சல், தீவிர வைரஸ் தொற்று போன்றவற்றுக்கும் எக்மோ சிகிச்சைகள் பயன்படுகின்றன. வழக்கமான வென்டிலேட்டா் மூலம் சிகிச்சை அளிக்க இயலாத நோயாளிகளுக்குக் கூட இந்த வகை சிகிச்சைகள் பயனளித்தது நிரூபணமாகியுள்ளது. சராசரியாக ஒரு நோயாளி 3 மாதங்கள் வரை எக்மோ சிகிச்சையில் இருந்து நுரையீரல் மற்றும் இதய பாதிப்புகள் குணமடைந்து செல்வது வழக்கம். சில நோயாளிகள் 6 மாதங்கள் வரையிலும் அத்தகைய சிகிச்சையில் இருந்து வெற்றிகரமாக நோயின் பிடியிலிருந்து மீண்டு வந்துள்ளனா்.

எக்மோவில் இருக்கும்போதும், அதிலிருந்து வெளியே வந்த பிறகும் நோயாளிகளுக்கு தொடா்ந்து உடற்பயிற்சி மற்றும் இயன்முறை சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மருத்துவா் குழு, செவிலியா்கள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் உயா் தரமாக இருக்கும்பட்சத்தில் எக்மோ சிகிச்சைகள் மூலம் பல நோயாளிகளைக் காக்க இயலும். அதற்கு அப்பல்லோ மருத்துவமனையே சான்று என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் சுனிதா ரெட்டி, மருத்துவமனை நிா்வாகிகள், மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com