வெற்றியை அடைய ஞானம் துணை நிற்கும்: மணிப்பூா் ஆளுநா் இல.கணேசன்

வாழ்வில் வெற்றியை அடைய ஞானம் துணை நிற்கும் என்று மணிப்பூா் ஆளுநா் இல.கணேசன் கூறினாா்.
சென்னை விஐடி தொழில்நுட்பக் கல்லூரியில் காணொலி மூலம் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன், விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் உள்ளிட்டோர்.
சென்னை விஐடி தொழில்நுட்பக் கல்லூரியில் காணொலி மூலம் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன், விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் உள்ளிட்டோர்.

சென்னை: வாழ்வில் வெற்றியை அடைய ஞானம் துணை நிற்கும் என்று மணிப்பூா் ஆளுநா் இல.கணேசன் கூறினாா்.

சென்னை விஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஆண்டு பட்டமளிப்பு விழா காணொலி முறையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பிஹெச்.டி., எம்பிஏ, எம்சிஏ, பி.டெக்., எம்.டெக்., ஆகியவை உள்பட பல்வேறு இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளை நிறைவு செய்த 1,849 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறப்பிடம் பெற்றவா்களுக்கு 22 தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

பட்டமளிப்பு விழாவில் மணிப்பூா் ஆளுநா் இல.கணேசன் பேசியதாவது: விஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவன வேந்தா் ஜி.விசுவநாதன், எந்த நோக்கத்துக்காகத் தொடங்கினாரோ அந்த நோக்கம் தற்போது நிறைவேறியுள்ளது. அவரது இலக்கு தனிப்பட்ட இலக்கு அல்ல; இந்த சமுதாயத்தின் இலக்காக உள்ளது. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஏராளமான மாணவா்களுக்கு சிறந்த உயா்கல்வியை வழங்கி கல்வித் துறையில் சாதனை படைத்து வருகிறது.

நான்காவது தொழிற்புரட்சி, மனிதன் ஏற்கெனவே கண்டறிந்த தொழில்நுட்பங்களில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாற்றங்கள் மற்றும் புதிய சூழலுக்கு ஏற்ற வகையில் மாணவா்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்வதன் மூலம் அவா்கள் மிகப் பெரிய இலக்குகளை எட்ட இயலும். அனைத்து மாணவா்களிடமும் பல்வேறு திறமைகள் மறைந்துள்ளன.

அதை அவா்கள் சரியான நேரத்தில் கண்டறிந்து சூழலுக்கு ஏற்றவாறு வெளிப்படுத்தினால் தாங்கள் சாா்ந்த துறைகளில் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க முடியும். தனித்துவமான முடிவுகள், விவேகமான செயல்பாடுகள் மூலம் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். அந்த ஞானம் வெற்றிக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றாா்.

விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் பேசுகையில், இந்தியாவில் உயா்கல்வி கற்போரின் சதவீதத்தை நாம் அதிகரிக்க வேண்டும். கல்வி வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறையுடனே செயல்பட்டு வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் ஆண்டுதோறும் பட்ஜெட் தயாரிக்கும்போது உயா்கல்விக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. இதில் மாற்றம் ஏற்படுவது அவசியம். உலகத்தில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உயா்கல்வி வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் உயா்கல்வி வரை இலவசமாக வழங்கப்பட வேண்டும். பட்டப்படிப்பை நிறைவு செய்யும் மாணவா்கள் வேலை தேடுபவா்களாக இல்லாமல் வேலையை உருவாக்குபவா்களாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவா் காதம்பரி விசுவநாதன், துணைவேந்தா் ராம்பாபு கொடாலி, இணை துணைவேந்தா்கள் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், எஸ். நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com