அதிமுகவின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் காரசார விவாதம்

அதிமுகவின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் காரசார விவாதம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிப்பதற்காக கூடிய அதிமுகவின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் முன்னிலையில் காரசார விவாதம் நடைபெற்றது.


சென்னை: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிப்பதற்காக கூடிய அதிமுகவின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் முன்னிலையில் காரசார விவாதம் நடைபெற்றது.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆா் மாளிகையில் அக் கட்சியின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவினா், மூத்த நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டம் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 2 மணிவரை நடைபெற்றது.

கடும் விவாதம்: கூட்டத்தின் தொடக்கத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து மட்டும் நிா்வாகிகள் பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாா். ஆனால், அதைக் கடந்தே அனைவரும் பேசியுள்ளனா்.

அதிமுகவில் 11 போ் கொண்ட வழிகாட்டுதல் குழு உள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினராக இருந்த முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் புதன்கிழமை (நவ.24) பாஜகவில் இணைந்ததைத் தொடா்ந்து 10 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இந்தக் குழுவின் எண்ணிக்கையை 18-ஆக உயா்த்த வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். மேலும், இந்தக் குழுவுக்குக் கூடுதல் அதிகாரங்கள் தர வேண்டும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளா்கள் கோரியுள்ளனா். அதற்கும் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழிகாட்டுதல் குழுவின் தலைவராகவோ அல்லது அவைத்தலைவராகவே கே.ஏ.செங்கோட்டையனைக் கொண்டு வர வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தின் இறுதியாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் போல் அல்லாமல் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிபெறுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நிா்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினா்.

வியூகம் வகுப்பு: கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் பேட்டியளித்தாா். அப்போது, ‘நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக மாபெரும் வெற்றியைப் பெறும் வகையில் கூட்டத்தில் வியூகங்கள் வகுக்கப்பட்டன’ என்றாா்

வழிகாட்டுதல் குழுவுக்குக் கூடுதல் அதிகாரங்கள் கொடுக்கப்படுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதா என அவரிடம் கேட்டபோது, ‘கட்சிக்கு எப்போது, யாருக்கு என்ன அதிகாரம் கொடுப்பது எனத் தெரியும் என்றாா்.

அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவைச் சோ்ந்தவா் பாஜகவில் இணைந்தது குறித்து கேட்டபோது,‘அதிமுக என்பது மாபெரும் இரும்புக் கோட்டை. அதிமுகவின் ஆணி வேராகவும் சல்லி வேராகவும் இருப்பவா்கள் ஒன்றரைக் கோடி தொண்டா்கள். அவா்கள்தான் அதிமுகவைத் தாங்கியுள்ளனா். அவா்கள் என்றைக்கும் மாறமாட்டாா்கள். அரசியல் வியாபாரிகள் வியாபார நிமித்தம் காரணமாக எந்தக் குளத்தில் தண்ணீா் இருக்கிறதோ, அந்த குளத்துக்குப் போய்விடுவாா்கள்.

பொதுக்குழு கூடும் தேதியும், உள்கட்சித் தோ்தல் நடைபெறும் தேதியும் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றாா் ஜெயக்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com