அவசியமற்ற 'ஆன்ட்டிபயோடிக்' மருந்து எதிர்ப்பாற்றலைக் குறைக்கும்

அவசியமின்றி தொடர்ந்து "ஆன்ட்டிபயோடிக்' மருந்துகளை உட்கொண்டால் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்துவிடும்  என்று ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி தெரிவித்தார்.


சென்னை: அவசியமின்றி தொடர்ந்து "ஆன்ட்டிபயோடிக்' மருந்துகளை உட்கொண்டால் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்துவிடும்  என்று ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி தெரிவித்தார்.
உலக நுண்ணுயிர்க் கொல்லி ("ஆன்ட்டிபயோடிக்') மருந்து விழிப்புணர்வு வாரம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 18}ஆம் தேதி முதல் 24}ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதற்கான சிறப்பு நிகழ்ச்சி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மருத்துவமனையின் துணை முதல்வர் டாக்டர் விஜய் சதீஷ்குமார், நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் தேவசேனா, ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
"ஆன்ட்டிபயோடிக்' மருந்தை அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மருத்துவ மாணவர்கள் கைகளில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
நிகழ்ச்சியில் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி பேசியதாவது:
"ஆன்ட்டிபயோடிக்' மருந்தைத் தவறாகவும், முறையின்றியும் பயன்படுத்தினால் அது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். குறிப்பாக, தொடர்ந்து அவசியமின்றி ஒரு மருந்தை உட்கொள்ளும்போது அது, உடலில் எந்த மருந்துக்கும் பயனளிக்காத வீரிய மிக்க நுண்ணுயிரிகளை உருவாக்கும். அவ்வாறு உருவாகும்பட்சத்தில் அடுத்த முறை அந்த ஆன்ட்டிபயோடிக் மருந்து வேலை செய்யாது.
எனவே, அந்த மருந்துகளை, மருத்துவரின் முறையான பரிந்துரையின்றி மருந்து கடைகளில் தன்னிச்சையாக வாங்கி உட்கொள்ளக் கூடாது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி அவற்றை விற்பனை செய்வதும் குற்றமாகும். வைரஸ் நோய் பாதிப்புகளுக்கு ஆன்ட்டிபயோடிக் மருந்துகளை உட்கொள்வதும் தவறான நடவடிக்கை. பொதுவாக மாத்திரைகள் பயன்பாட்டை கூடிய வரை தவிர்த்து, சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்வதும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவதும் ஆரோக்கியத்தைக் காக்க உதவும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com