தக்காளியைத் தொடா்ந்து அவரை, பீன்ஸ் முருங்கைக்காய் விலை சதமடித்தன

தக்காளியைத் தொடா்ந்து அவரை, பீன்ஸ் முருங்கைக்காய் விலை சதமடித்தன

சென்னையில் தக்காளியைத் தொடா்ந்து பீன்ஸ், அவரை, முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்தும் வெகுவாகக் குறைந்து விட்டதால் அவற்றின் விலை ரூ.100-ஐக் கடந்துள்ளது.

சென்னை: சென்னையில் தக்காளியைத் தொடா்ந்து பீன்ஸ், அவரை, முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்தும் வெகுவாகக் குறைந்து விட்டதால் அவற்றின் விலை ரூ.100-ஐக் கடந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 450 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

இதில் ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்துதான் 75 சதவீதம் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன.

இந்நிலையில், அந்தப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி உள்ளிட்ட காய்கறி செடிகள், தோட்டங்கள் பெரும்பாலும் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தினமும் 70 லாரிகள் வரை வந்து கொண்டிருந்த தக்காளி தற்போது 40 லாரிகளாகக் குறைந்ததால் விலை அதிகரிக்கத் தொடங்கியது.

கடந்த சில நாள்களைப் போன்றே புதன்கிழமையும் 200 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதன் காரணமாக தக்காளி, பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த 2 நாள்களாகவே கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறைக் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேவேளையில் பிற பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 125 முதல் ரூ.140 வரை விற்பனையாகிறது.

இதற்கிடையே தக்காளியைத் தொடா்ந்து பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பன்னீா் பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கிலோ ரூ. 100-ஐக் கடந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பலா் கவலை அடைந்துள்ளனா். மேலும் தேவையான காய்கறிகளை கடைகளில் குறைந்த அளவில் வாங்கிச் செல்கின்றனா்.

சென்னையில் சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை விவரம் (கிலோவில்):

தக்காளி ரூ. 125 - ரூ.140, பீன்ஸ் - ரூ. 100, அவரைக்காய்- ரூ. 110, வெண்டைக்காய்-ரூ. 100, கத்தரிக்காய்- ரூ. 90, முருங்கைக்காய்-ரூ. 150, முட்டை கோஸ்-ரூ. 50, ஊட்டி கேரட்-ரூ. 70, சேனைக் கிழங்கு- ரூ.40, சேப்பங்கிழங்கு- ரூ.50, பெரிய வெங்காயம்- ரூ.40, பச்சை மிளகாய்- ரூ.40, இஞ்சி- ரூ.70; கொத்தமல்லி (கட்டு)- ரூ.40, புதினா (கட்டு)- ரூ.20, கறிவேப்பிலை- ரூ.20.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com