வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தலில் சமமான இடங்கள் ஒதுக்கக் கோரிய வழக்கு 29-இல் விசாரணை

சென்னை மாநகராட்சியில் வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தலில் ஆண்கள், பெண்களுக்கு சமமான இடங்கள் ஒதுக்கக் கோரிய வழக்கை வரும்  விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னை மாநகராட்சியில் வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தலில் ஆண்கள், பெண்களுக்கு சமமான இடங்கள் ஒதுக்கக் கோரிய வழக்கை வரும் திங்கள்கிழமை (நவ.29) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஆா்.பாா்த்திபன் தாக்கல் செய்த மனுவில், சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வாா்டுகளில் பட்டியலினத்தவா், பட்டியலினத்தைச் சோ்ந்த பெண்களுக்கு மொத்தமாக 32 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 168 இடங்களில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில், 84 இடங்கள் தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், கடந்து 2019-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசிதழில் 89 இடங்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கு 79 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கான இடங்கள் குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இருவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலையில், அரசிதழில் பெண்களுக்கு கூடுதலாக வாா்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதைச் சரி செய்யக்கோரி, நவம்பா் 13-ஆம் தேதி தமிழ்நாடு அரசு, மாநில தோ்தல் ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த மனு தொடா்பாக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரிக்கக் கோரி வழக்குரைஞா் கௌதமன் என்பவா் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை (நவ.24) முறையீடு செய்தாா்.

இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வரும் திங்கள்கிழமை (நவ.29) வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com