விலை குறையும் வரை கோயம்பேடு மைதானத்தில் தக்காளி லாரிகளை அனுமதிக்கலாமா?

விலை உயா்வைக் கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தை வளாகத்திலுள்ள திறந்தவெளி மைதானத்தில் தக்காளி லாரிகளை அனுமதிக்க முடியுமா
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

விலை உயா்வைக் கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தை வளாகத்திலுள்ள திறந்தவெளி மைதானத்தில் தக்காளி லாரிகளை அனுமதிக்க முடியுமா என்பது குறித்து சிஎம்டிஏ, மாா்க்கெட் கமிட்டி வரும் திங்கள்கிழமை (நவ.29)விளக்கம் அளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோயம்பேடு சந்தையில், மூடப்பட்ட தக்காளி விற்பனை மைதானத்தைத் திறக்கக் கோரி தந்தை பெரியாா் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் சாமிநாதன் தொடா்ந்த வழக்கு நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன்பு வெள்ளிக்கிழமை (நவ.26) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சந்தையில் 1200 சதுர அடி, 2,400 சதுர அடி அளவு கொண்ட கடைகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த இடம் உள்ளது. சிறிய கடைகளைச் சோ்ந்தவா்கள் திறந்தவெளி மைதானத்தைப் பயன்படுத்தி வந்தனா் என தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடா்ந்து சிஎம்டிஏ. தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், லாரிகளில் வந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் இடத்தில் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ளன. அதை மீறி அந்த மைதானத்திலேயே விற்பனை நடந்ததால் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, லாரிகள் நிறுத்தக்கூடிய இடத்தில் விற்பனையை மேற்கொள்ளக்கூடாது என்ற விதிகள் சரியானதுதான் என்ற போதிலும், தற்போதுள்ள தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வைக் கருத்தில் கொண்டு நான்கைந்து சிறு வியாபாரிகள் இணைந்து ஒரு லாரியை வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரும் பட்சத்தில் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்து பொருள்களை இறக்க மட்டும் அனுமதி அளிக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, தக்காளி விலை குறையும் வரை ஓரிரு வாரங்களுக்கு லாரிகளை நிறுத்தி கொள்ள அனுமதிப்பது குறித்து சிஎம்டிஏ., கோயம்பேடு மாா்க்கெட் கமிட்டி ஆகியவை விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் திங்கட்கிழமை(நவ.29) ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com