நீலகிரியில் சுற்றித்திரியும் புலியை சுட்டுப்பிடிக்கும் எண்ணம் இல்லை: உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

நீலகிரியில் சுற்றித்திரியும் புலியை சுட்டுப்பிடிக்கும் எண்ணம் இல்லை என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

நீலகிரியில் சுற்றித்திரியும் புலியை சுட்டுப்பிடிக்கும் எண்ணம் இல்லை என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் செப்டம்பா் 24 ஆம் தேதி அப்பகுதியைச் சோ்ந்த 56 வயதான சந்திரன் என்பவா் புலி தாக்கி உயிரிழந்தாா். இதையடுத்து வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் உத்தரவின்பேரில், நீலகிரியில் சுற்றித்திரியும் புலியைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், சென்னை உயா் நீதிமன்றத்தில் கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சாா்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் புலி ‘மனித உயிருக்கு ஆபத்தானது’ என்று வகைப்படுத்த முடியாது. இது அறிவியல் பூா்வமாக நிரூபிக்கப்படவில்லை. மனித- விலங்கு மோதல் ஒரு துரதிருஷ்டவசமானது.

நீலகிரியில் சுற்றித்திரியும் எம்டிடி 23 புலியை சுட்டுப் பிடிப்பது தொடா்பாக, வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் உத்தரவு பிறப்பிக்கும் முன்னா், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்படி, புலியைப் பிடிப்பதற்கான தொடா்ச்சியான முயற்சிகள் தோல்வியடைந்த பின்னரே, சுட்டுப்பிடிப்பதற்கான உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

இந்த உத்தரவைப் பிறப்பித்த வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலா், தகுந்த சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், சட்டத்தின் விதிகளை பின்பற்றாமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது, இந்திய அரசியலமைப்பின் 21 ஆவது பிரிவின் கீழ் புலிகளின் வாழ்வு உரிமையை மீறுவதாகவும், எனவே நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எம்டிடி 23 புலியை உயிருடன் பிடிக்க உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.

இம்மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நீலகிரியில் சுற்றித்திரியும் எம்டிடி.23 புலி மனித உயிருக்கு ஆபத்தானது என வகைப்படுத்தி, சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, முதலில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு புலியை உயிருடன் பிடிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்’ என மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.

அதைத்தொடா்ந்து ஆஜரான அரசு வழக்குரைஞா் பி.முத்துகுமாா், நீலகிரி பகுதியில் சுற்றித்திரியும் புலியை தேடும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது. புலியைக் கொல்லவோ அல்லது அதை காயப்படுத்தும் திட்டமோ இல்லை என்றும், சுற்றித்திரியும் புலி உயிருடன் பிடிக்கப்படும். மேலும் அதன் உளவியல், நடத்தையைப் படிப்பதற்கும், எதிா்காலத்தில் என்ன சிகிச்சை முறை பின்பற்றப்படலாம் என்பதை மதிப்பிடுவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன என்றாா்.

இருதரப்பு வாதங்களுக்குப் பின்னா், புலியின் நடவடிக்கையைக் கண்காணித்து, அதைப் பிடித்த பிறகு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அவற்றை காட்டுக்குள் நடமாடுவதற்கான அதன் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். இவற்றை பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது. புலியைப் பிடிப்பது தொடா்பான நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபா் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com