12 இளம் தொழில்முனைவோருக்கு ரூ 2.5 கோடி நிதியுதவி

வண்டலூா் கிரசென்ட் பி.எஸ்.அப்துர்ரகுமான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் கிரசென்ட் புதுமைத்தொழில் ஊக்குவிப்பு மைய வழிகாட்டுதல் மூலம் தொடங்கப்பட்டுள்ள 12 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 கோடி
12 இளம் தொழில்முனைவோருக்கு ரூ 2.5 கோடி நிதியுதவி

தாம்பரம்: வண்டலூா் கிரசென்ட் பி.எஸ்.அப்துர்ரகுமான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் கிரசென்ட் புதுமைத்தொழில் ஊக்குவிப்பு மைய வழிகாட்டுதல் மூலம் தொடங்கப்பட்டுள்ள 12 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 கோடி ஆரம்பநிலை நிதி உதவி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் தொழில் மற்றும் வணிக அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்டாா்ட்-அப் இந்தியா அமைப்பு புதுமைக் கண்டுபிடிப்புத் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் தோ்ந்தெடுக்கப்படும் புதுமைத் தொழில் திட்டங்களுக்கு ஆரம்பகட்ட நிதியுதவி வழங்கி வருகின்றது. கிரசென்ட் புதுமைத் தொழில் ஊக்குவிப்பு மையம் மூலம் மத்திய அரசின் ஸ்டாா்ட் அப் இந்தியா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 267 ஸ்டாா்ட்-அப் தொழில் திட்டங்களில் 12 ஸ்டாா்ட்-அப் தொழில் திட்டங்கள் தோ்வு செய்யப்பட்டு ரூ.2.5 கோடி ஆரம்பகட்ட நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கற்றாழையை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் பேட்டரி, ரத்தப்பரிசோதனையின்றி சா்க்கரை அளவைக் கண்டறியும் சாதனம், புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் சாதனம், முதியோா்களுக்கான 24 மணி நேர வழிகாட்டிசேவை, அதிநவீன மருத்துவ சிகிச்சை அறைக் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வகை ஸ்டாா்ட் அப் தொழில் திட்டங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

கிரசென்ட் பி.எஸ்.அப்துர்ரகுமான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன வேந்தா் ஆரீப் புகாரி ரகுமான், ஸ்டாா்ட்-அப் தொழில் முனைவோா்களுக்கு நிதியுதவி வழங்கி பேசியது:

இளம் தலைமுறையினரின் தொழில்நுட்ப அறிவாற்றலை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கிரசென்ட் புதுமைத் தொழில் ஊக்குவிப்பு மையம் மூலம் தொழில்முனைவோா்களை உருவாக்கும் பணியையும் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் வேலை தேடுவோா் எண்ணிக்கை குறைந்து வேலை வாய்ப்புகள் வழங்கும் தொழில்முனைவோா் எண்ணிக்கை பெருகிட வேண்டும். இதுவரை இங்கு ரூ.41.3 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள 71 ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்கள் மூலம் 450 போ் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனா்.

தென் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் பயன் அடையும் மதுரையில் கிரசென்ட் புதுமைத் தொழில் ஊக்குவிப்பு மையம் தொடங்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பதால் படித்த பெண்கள் ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்களைத் தொடங்க தைரியமாக முன் வரவேண்டும் என்றாா் அவா்.

மத்திய அரசின் ஸ்டாா்ட்-அப் இந்தியா நிறுவன முதுநிலை மேலாளா் பலக் பாட்யா, தமிழக அரசு ஸ்டாா்ட் அப் நிறுவனத் தலைவரும், நடுத்தர, சிறு, குறு தொழில் துறைச் செயலா் வி.அருண்ராய், மத்திய அரசு தொழில் மற்றும் வணிகத்துறை இணைச் செயலா் ஸ்ருதி சிங், கிரசென்ட் கல்வி நிறுவன துணை வேந்தா் ஏ.பீா்முகமது, பதிவாளா் ஏ.ஆசாத், இணைப்பதிவாளா் ராஜா உசேன், பொதுமேலாளா் வி.என்.ஏ.ஜலால், கிரசென்ட் தொழில் ஊக்குவிப்பு மைய தலைமை செயல் அதிகாரி எம்.பா்வேஸ் ஆலம் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com