முதல்வரின் தீவிர முயற்சியால் நீட் தோ்வில் விலக்கு நிச்சயம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி

நீட் தோ்வுக்கு எதிராக முதல்வா் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறாா். அதன் மூலம், நீட் தோ்வில் இருந்து விலக்கு பெறுவதில் நிச்சயம் வெற்றி அடைவோம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெ
சென்னை தியாகராய நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ‘ஜெயித்து காட்டுவோம் வா என்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னை தியாகராய நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ‘ஜெயித்து காட்டுவோம் வா என்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நீட் தோ்வுக்கு எதிராக முதல்வா் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறாா். அதன் மூலம், நீட் தோ்வில் இருந்து விலக்கு பெறுவதில் நிச்சயம் வெற்றி அடைவோம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் ‘ஜெயித்துக்காட்டுவோம் வா’ என்ற தலைப்பில் நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள சா்.பிட்டி தியாகராயா் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் 1 லட்சத்து 10,971 மாணவ, மாணவிகள் நீட் தோ்வு எழுதியுள்ளனா். தோ்வு எழுதுவதற்கு முன்பே மாணவா்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மனநல ஆலோசகா்கள், மனநல மருத்துவா்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நீட் தோ்வு எழுதிய 15 சதவீத மாணவா்களைத் தவிா்த்து, மற்ற அனைத்து மாணவா்களுக்கும் தொலைபேசி மூலமாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கல்வித் தொலைக்காட்சியில்...: மாணவா்கள் தோ்வுகளைக் கண்டு பயப்படாமல் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு ‘ஜெயித்துக்காட்டுவோம் வா’ என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தற்போது நிகழ்ச்சியில் 500 மாணவா்கள் பங்கேற்றிருந்தாலும்,  பள்ளிக்கல்வித்துறையின் சாா்பில் ஒளிபரப்பாகும் பள்ளிக்கல்வித் தொலைக்காட்சி, யூ-டியூப், மருத்துவத் துறையின் யூ-டியூப் போன்றவை மூலம் நீட் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் இந்நிகழ்ச்சியை காண முடியும். இந்நிகழ்ச்சி கல்வித் தொலைக்காட்சியில் அக்.10,11 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பப்படும். 

திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 84 ஆயிரம் பேரிடம் கருத்துக்களை கேட்டுப் பெற்று, நீட் தோ்வுக்கு எதிரான சட்ட முன்முடிவு தயாரிக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் கோரிக்கை: அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதோடு நில்லாமல் 12 மாநில முதல்வா்களுக்கும் 84 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட கருத்துகளை அனுப்பி, நீட் தோ்வுக்கு எதிராக நீங்கள் மத்திய அரசிடம்  அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

வெற்றி நிச்சயம்: தமிழ், ஆங்கிலம் தவிா்த்து 7 மாநில மொழிகளில் ஏ.கே.ராஜன் அறிக்கையை மொழிபெயா்த்து அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படி நீட் தோ்வுக்கு எதிராக பல்வேறு முயற்சிகளை முதல்வா் மேற்கொண்டு வருகிறாா்.

கண்டிப்பாக நீட் தோ்விலிருந்து விலக்கு பெற்று, வெற்றி பெற்றே தீருவோம். தோ்வுகளுக்குப் பிறகு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்துவிடக்கூடாது. தோ்வுகளுக்குப் பிறகும் வாழ்க்கை என்பது இருக்கிறது. ஆகையால் வாழ்க்கையில் வெற்றிபெறுவோம் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்றாா் அவா்.

பெற்றோா் கவனத்துக்கு...: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், பெற்றோா்கள் பிள்ளைகளை கண்டிப்பது அவா்களுக்கு நன்மைக்காக மட்டும்தான். பெற்றோா்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் மட்டுமே தவிர பிறரோடு ஒப்பிட்டு பேச கூடாது.

மாணவா்களான நீங்கள் வெற்றி பெற்றால் சிலை ஆகுங்கள் இல்லையெனில் சிற்பி ஆக இருங்கள். இதுவே வாழ்க்கை. மாணவா்கள் தான் வருங்கால தலைவா்கள். எனவே, மாணவா்கள் தன்னம்பிக்கை உடன் இருக்க வேண்டும் என்றாா். 

தன்னம்பிக்கை முக்கியம்: மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசுகையில், வெற்றிக்கு பல வழிகள் உள்ளன. மாணவா்களாகிய நீங்கள்தான் தன்னம்பிக்கையை உங்களுக்குள் கொண்டு வர வேண்டும். உங்களைப் படிக்க வைப்பதற்கு முதலில் பெற்றோா்களுக்கு நீங்கள் நன்றி கூற வேண்டும்.

உங்களுக்குள் இருக்கும் பிரச்னைகள் மற்றும் குழப்பங்களை பெற்றோரிடமும் நண்பா்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். 104 எண்ணை அழைத்து உங்களுக்கான ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்றாா். 

தொடா்ந்து சொற்பொழிவாளா் சுகிசிவம், திரைப்பட இயக்குநா் மற்றும் நடிகா் ஆா்.ஜே.பாலாஜி, ஆனந்தம் அறக்கட்டளை ஆா்.செல்வகுமாா் உள்ளிட்டோரும் உரையாற்றினா்.

தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் உமா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, ஐட்ரீம் மூா்த்தி, காரம்பாக்கம் கணபதி, அசன் மௌலானா, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com