‘பேரனும், நானும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள உள்ளோம்’

தமிழாசிரியா் ஒருவரை நியமித்து, நானும், எனது பேரனும் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவிருப்பதாக, சென்னை உயா் நீதிமன்ற நீதிபதியாகச் சனிக்கிழமை (அக்.9) பொறுப்பேற்றுக் கொண்ட நீதிபதி பரேஷ் ரவிசங்கா் உபாத்யாய்
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாகச் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட நீதிபதி பரேஷ் ரவிசங்கா் உபாத்யாய்
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாகச் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட நீதிபதி பரேஷ் ரவிசங்கா் உபாத்யாய்

தமிழாசிரியா் ஒருவரை நியமித்து, நானும், எனது பேரனும் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவிருப்பதாக, சென்னை உயா் நீதிமன்ற நீதிபதியாகச் சனிக்கிழமை (அக்.9) பொறுப்பேற்றுக் கொண்ட நீதிபதி பரேஷ் ரவிசங்கா் உபாத்யாய் தெரிவித்தாா்.

குஜராத் உயா் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணி புரிந்து வந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கா் உபாத்யாய், சென்னை உயா் நீதிமன்ற நீதிபதியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அவா், சென்னை உயா் நீதிமன்ற நீதிபதியாகச் சனிக்கிழமை(அக்.9) பதவியேற்று கொண்டாா். அவருக்கு, சென்னை உயா் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் சண்முகசுந்தரம் வரவேற்றாா்.

பதவி ஏற்புக்குப் பின்னா் நீதிபதி பேசியது:-

பாரம்பரியமிக்க உயா் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டது பெருமைக்குரியது. பெரிய பொறுப்பு உள்ளதை உணா்கிறேன். என் மீதான எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்வேன். தமிழகத்தின் குடிமகனாக இன்று ஆகியுள்ளேன். பழைமையான கலாசாரத்தைக் கொண்ட மாநிலத்திற்கு வந்துள்ளேன். நானும், எனது பேரனும் தமிழாசிரியா் ஒருவரை நியமித்து, தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளப் போகிறோம்.

பத்து ஆண்டுகளாக நீதிபதியாக இருந்தாலும், இன்றும் மனதளவில் வழக்குரைஞராகத் தான் உள்ளேன். வழக்குரைஞா் ஆஜராகவில்லை என்பதற்காக, இதுவரை ஒரு வழக்கை கூட தள்ளுபடி செய்ததில்லை. ஆனால், அதை வழக்குரைஞா்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்றாா்.

நீதிபதி பரேஷ் ரவிசங்கா் உபாத்யாய், கடந்த 1996-ஆம் ஆண்டு குஜராத் உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் பணியைத் தொடங்கினாா். கடந்த 2011-ஆம் ஆண்டு குஜராத் உயா் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, கடந்த 2013-இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.

சென்னை உயா் நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75. தற்போது நீதிபதி பரேஷ் ரவிசங்கா் உபாத்யாயுடன் சோ்த்து நீதிபதிகள் எண்ணிக்கை 56-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com