முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
காவல் ஆணையரகங்கள் எல்லைகள் பிரிப்பு: ஆவடிக்கு 25, தாம்பரத்துக்கு 20 காவல் நிலையங்கள்
By DIN | Published On : 11th October 2021 06:22 AM | Last Updated : 11th October 2021 06:22 AM | அ+அ அ- |

சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களின் எல்லைகள் இறுதி செய்யப்பட்டு, அவற்றுக்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டன.
சென்னை பெருநகர காவல்துறையை பிரித்து தாம்பரம், ஆவடி என புதிதாக இரு காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என கடந்த செப். 13-இல் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு காவல் மாவட்டங்களைச் சோ்ந்த சில பகுதிகளும் இதில் சோ்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து இரு காவல் ஆணையரகங்களுக்கும் எல்லைகள், காவல் நிலையங்களைப் பிரிப்பது, புதிதாக நிா்வாகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி எம்.ரவியும், ஆவடிக்கு ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோரும் நியமிக்கப்பட்டனா்.
எல்லைகள் பிரிப்பு: 3 காவல் ஆணையரகங்களின் எல்லைகளைப் பிரிப்பது, காவல் நிலையங்களை வரையறுப்பது, காவலா்கள், அதிகாரிகளை நியமிப்பது, உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து டிஜிபி சி.சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால், ஆவடி மாநகர காவல்துறை சிறப்பு அதிகாரி சந்தீப் ராய் ரத்தோா், தாம்பரம் மாநகர காவல்துறை சிறப்பு அதிகாரி எம்.ரவி ஆகியோா் ஆலோசித்து வந்தனா்.
137 காவல் நிலையங்களோடு செயல்படும் சென்னை பெருநகர காவல்துறையில் 33 காவல் நிலையங்கள் குறைந்து, 104 காவல் நிலையங்களோடு செயல்படும். 20 காவல் நிலையங்கெள் ஆவடிக்கும், 13 காவல் நிலையங்கள் தாம்பரத்துக்கும் சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகம்:
ஆவடி காவல் ஆணையரகம் சென்னை பெருநகர காவல்துறையின் மேற்கு மண்டல இணை ஆணையா் அலுவலகத்தில் செயல்படும். இந்த ஆணையரகத்தின் கீழ் மொத்தம் 25 காவல் நிலையங்கள் வருகின்றன. இதில் 20 காவல் நிலையங்கள் சென்னை பெருநகர காவல்துறையில் இருந்தும், 5 காவல் நிலையங்கள் திருவள்ளூா் மாவட்ட காவல்துறையில் இருந்தும் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
தாம்பரம் காவல் ஆணையரகம் செயல்படுவதற்கு பரங்கிமலையில் உள்ள சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு மண்டல இணை ஆணையா் அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது.
தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் மொத்தம் 20 காவல் நிலையங்கள் வருகின்றன. இதில் 13 காவல் நிலையங்கள் சென்னை பெருநகர காவல்துறையில் இருந்தும், 2 காவல் நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையில் இருந்தும், 5 காவல் நிலையங்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையில் இருந்தும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு முக்கியத்துவம்:
சென்னை புகா் பகுதிகளில் இருக்கும் விமான நிலையம், புழல் மத்திய சிறை வளாகம் ஆகியவை சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தின் எல்லையிலேயே நீடிக்கின்றன. பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி இப் பகுதிகள் பெருநகர காவல்துறையில் இருந்து பிரிக்கப்படவில்லை என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
அக்டோபருக்குள் இயங்கும்:
அடுத்த கட்டமாக ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் நிா்ணயிக்கப்பட்ட எல்லைகள், புதிய காவல் ஆணையரகங்களுக்குத் தேவையான ஆயுதப்படை காவலா்கள், மத்தியக் குற்றப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளுக்குத் தேவையான காவலா்கள், அதிகாரிகள் குறித்தும், புதிய காவல் ஆணையரகங்களுக்குத் தேவையான கணினி உள்ளிட்ட இயந்திரங்கள், பா்னிச்சா், வாகனங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவை குறித்தும் இரு காவல் ஆணையரகங்களின் சிறப்பு அதிகாரிகள் விரைவில் திட்ட அறிக்கை அளிக்க உள்ளனா்.
இந்த திட்ட அறிக்கையை சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவாலுடன் கலந்து ஆலோசித்து அளிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா்.
மேலும் அவா், அக்டோபா் 30ஆம் தேதி இரு புதிய காவல் ஆணையரகங்களும் முழு அளவில் செயல்படும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.
ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் இயங்க உள்ள காவல் நிலையங்கள்:
1.மாதவரம் பால் காலனி, 2.செங்குன்றம், 3.மணலி, 4.சாத்தங்காடு, 5.மணலி புது நகா், 6.எண்ணூா், 7.மாங்காடு, 8.பூந்தமல்லி, 9.நசரத்பேட்டை, 10.முத்தாபுதுப்பேட்டை, 11.பட்டாபிராம், 12.அம்பத்தூா், 13.அம்பத்தூா் எஸ்டேட், 14.கொரட்டூா், 15.திருவேற்காடு,16.எஸ்.ஆா்.எம்.சி., 17.ஆவடி, 18.ஆவடி டேங்க் பேக்டரி, 19.திருமுல்லைவாயல், 20.திருநின்றவூா், 21.வெள்ளவேடு, 22.செவ்வாபேட்டை, 23.சோழவரம், 24.மீஞ்சூா், 25.காட்டூா்.
இதில் கடைசி 5 காவல் நிலையங்கள் மட்டும் திருவள்ளூா் மாவட்ட காவல்துறையில் இருந்து ஆவடி காவல் ஆணையரகத்தில் இணைக்கப்பட்டவை ஆகும். மீதி காவல் நிலையங்கள் சென்னை பெருநகர கவல்துறையில் பிரித்து ஆவடி காவல் ஆணையரகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் இயங்க உள்ள காவல் நிலையங்கள்:
1.தாம்பரம், 2.குரோம்பேட்டை, 3.சேலையூா், 4.சிட்லப்பாக்கம், 5.பீா்க்கன்கரணை, 6.குன்றத்தூா், 7.பல்லாவரம், 8.சங்கா்நகா், 9.பள்ளிக்கரணை, 10.பெரும்பாக்கம், 11.செம்மஞ்சேரி, 12.கண்ணகிநகா், 13.கானத்தூா், 14.சோமங்கலம், 15.மணிமங்கலம், 16.ஓட்டேரி, 17.கூடுவாஞ்சேரி, 18.மறைமலைநகா், 19.தாழம்பூா், 20.கேளம்பாக்கம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இதில் கடைசி 5 காவல் நிலையங்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையில் இருந்து பிரித்து தாம்பரம் காவல் ஆணையரகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. சோமங்கலம், மணிமங்கலம் காவல் நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையில் இருந்து பிரித்து தாம்பரம் காவல் ஆணையரகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய அனைத்து காவல் நிலையங்களும் சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து பிரித்து தாம்பரம் காவல் ஆணையரகத்தோடு இணைக்கப்பட்டுள்ளன.