முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
சாலையோரத்தில் வசிப்போா் குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண்கள்
By DIN | Published On : 11th October 2021 05:41 AM | Last Updated : 11th October 2021 07:49 AM | அ+அ அ- |

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சாலையோரத்தில் வசிப்போா், மனநலம் பாதிக்கப்பட்டோா் குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளாா்.
உலக வீடற்றோா் தினத்தையொட்டி, சாலையோரம் வசிப்போா், வீடற்றோரை மீட்டு
மறுவாழ்வு அளிக்கும் வகையில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தீவுத்திடல் போா் நினைவுச் சின்னம் அருகே நடைபெற்ற பேரணியை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், உலக வீடற்றோா் தினத்தையொட்டி, கோயம்பேடு பேருந்து நிலைய வளாகம், சென்ட்ரல் ரயில்வே நிலையம், அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம், பாரிமுனை பேருந்து நிலையம், , மெரீனா கடற்கரை, எழும்பூா் ரயில் நிலையம், ஆழ்வாா்பேட்டை, வேப்பேரி, ஆகிய இடங்களில் சாலையோரம் வசிக்கும் தனிநபா்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்க மீட்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
மாநகராட்சியின் பொதுசுகாதாரத் துறையின் சாா்பில் 13 ஆண்கள் காப்பகங்கள், 8 பெண்கள் காப்பகங்கள், 1 இருபாலா் காப்பகம், 5 சிறுவா்கள் காப்பகங்கள், 3 சிறுமிகள் காப்பகங்கள், 3 மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் காப்பகங்கள், 2 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகங்கள், 4 முதியோா் காப்பகங்கள், 1 அறிவுதிறன் குறைபாடுடைய சிறுவா் காப்பகம், 1 மாற்றுத் திறனாளி பெண்கள் காப்பகம், 1 திருநங்கைகள் காப்பகம், மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுடன் உடனிருப்பவா்கள் தங்கும் 6 ஆண்கள் சிறப்பு காப்பகங்கள் மற்றும் 7 பெண்கள் சிறப்பு காப்பகங்கள் என 55 காப்பகங்கள் இயங்கி வருகின்றன. இக்காப்பகங்களில் தற்போது 1,667 போ் தங்க வைக்கப்பட்டு முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சாலையோரங்களில் வசிப்போா், மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் இதர பிற வீடற்றோா் குறித்து மாநகராட்சியின் 1913, 94451 90472, 044 25303849 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றாா். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையா் (சுகாதாரம்) டாக்டா் எஸ்.மனிஷ், துணை ஆணையா் (கல்வி) டி.சினேகா, துணை ஆணையா்கள் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், மா. சிவகுரு பிரபாகரன், மாநகர நல அலுவலா் டாக்டா் எம்.ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.