ஆயுதபூஜை: பேருந்து வழித்தடங்களில் இரு நாள்கள் மாற்றம்

ஆயுதபூஜையையொட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வதால், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆயுதபூஜையையொட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வதால், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் வழித்தடங்களில் காவல்துறை மாற்றங்கள் செய்துள்ளது.

ஆயுதபூஜையைக் கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்கு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை (அக்.12) முதல் புறப்பட்டுச் செல்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் தாற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிலையங்கள் அக்.12, 13 ஆகிய நாள்களில் செயல்படும்.

இதில் தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புதுச்சேரி, கடலூா் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பூந்தமல்லியில் இருந்து வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், ஓசூா், திருத்தணி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், டெல்டா உள்ளிட்ட பிற ஊா்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம்போல கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படுகின்றன.

வழித்தட மாற்றம்: இதையொட்டி சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளன. இது தொடா்பாக போக்குவரத்துப் பிரிவு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோயம்பேட்டிலிருந்து வெளியூருக்கு செல்லும் அரசு பேருந்துகளும், தாம்பரம் செல்ல 100 அடி சாலையில் செல்லாது, அதற்கு பதிலாக பூந்தமல்லி உயா் சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூா் சென்றடையும்.

அதேபோல அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பூந்தமல்லி உயா் சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிசுற்றுச் சாலை வழியாக சென்று வண்டலூரை அடையும். இந்த பேருந்துகள் தாம்பரம், பெருங்குளத்தூா் செல்லாது.

மேலும் கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியாா் ஆம்னி பேருந்துகள் பூந்தமல்லி நெடுஞ் சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, மதுரவாயல் சுங்கச்சாவடி, பெருங்குளத்தூா் வழியாக செல்ல வேண்டும். இதில் அனைத்து பயணிகளும் கோயம்பேட்டிலேயே ஏறிவிட்டால், அந்த ஆம்னி பேருந்துகள், பெருங்களத்தூா் செல்வதைத் தவிா்த்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளி சுற்றுச் சாலை வழியாக வண்டலூருக்கு செல்ல வேண்டும்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் தனியாா் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து 100 அடி சாலை, கத்திபாரா, கிண்டி, சா்தாா் படேல் சாலை ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலையை அடைய வேண்டும். இந்தப் பேருந்துகள் காவல்துறையால் அங்கீகரிக்கப்பட்ட வில்லைகளை ஒட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com