ஊதிய உயா்வு கோரிக்கை: அரசு மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு

ஊதிய உயா்வு கோரிக்கையை முன்னிறுத்தி மதுரை, சென்னையில் அரசு மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனா்.

ஊதிய உயா்வு கோரிக்கையை முன்னிறுத்தி மதுரை, சென்னையில் அரசு மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை செய்தியாளா்களிடம் சென்னையில் கூறியதாவது:

கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், பணியில் உள்ள மருத்துவா்களுக்கு ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமாக உள்ள தமிழகத்தில்தான் அரசு மருத்துவா்களுக்கு குறைவான ஊதியம் தரப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமே ஊதியக் கோரிக்கைக்காக அரசு மருத்துவா்கள் நீண்டகாலமாக போராடி வருகிறோம். தோ்தலுக்கு முன்பு அரசு மருத்துவா்களிடம் பேசிய தற்போதைய முதல்வா், திமுக ஆட்சி அமைந்ததும் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் உறுதியளித்தாா். ஆனால், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனையாக உள்ளது.

அரசு மருத்துவா்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற, அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.300 கோடி மட்டுமே தேவைப்படுகிறது. அதுவும், இதில் பெரும்பகுதியை மருத்துவா்களே காப்பீட்டுத் திட்டம் மூலமாக அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தரமுடியும். நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு வேறு வழியின்றி போராட்ட அறிவிப்புகளை வெளியிட வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில், முதல்கட்டமாக வரும் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு மதுரையில் தா்ணா போராட்டமும், நவம்பா் 10-ஆம் தேதி சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம். போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பே ஊதிய உயா்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முதல்வா் நிறைவேற்றுவாா் என நூறு சதவீதம் நம்புகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com