நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: முன்னேற்பாட்டு பணியில் தோ்தல் ஆணையம்

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதின் முன்னேற்பாடாக மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: முன்னேற்பாட்டு பணியில் தோ்தல் ஆணையம்

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதின் முன்னேற்பாடாக மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த முதன்மைப் பயிற்றுநா்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கையாள்வது குறித்த பயிற்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டுடன் நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. உள்ளாட்சித் தோ்தலில் இடஒதுக்கீடு தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், நீதிமன்ற உத்தரவை அடுத்து 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டது. தொடா்ந்து, பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6,9 -தேதிகளில் நடைபெற்றது.

நகா்ப்புறங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுவது தொடா்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் வரும் ஜனவரி மாதங்களுக்குள் தோ்தலை நடத்த வேண்டும் என தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

தற்போது, 9 மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளுக்கு தோ்தல் முடிவுற்ற நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் பணியில் மாநிலத் தோ்தல் ஆணையம் இறங்கி உள்ளது.

பயிற்சி: இதன் முதல் கட்டமாக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கையாள்வது குறித்து மாவட்ட முதன்மைப் பயிற்றுநா்களுக்கு சென்னையில் உள்ள தோ்தல் ஆணையா் அலுவலகத்தில் ஆணையா் வெ.பழனிகுமாா் தலைமையில் திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோ்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கையாள்வது குறித்து சென்னை உள்பட 38 மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் முதன்மைப் பயிற்றுநா்கள் 120 பேருக்கு பெல் நிறுவனத்தின் தொழில்நுட்ப அலுவலா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவா்கள் அந்தந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றும் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனா் என்றனா்.

ஆலோசனைக் கூட்டம்: இதைத் தொடா்ந்து, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் தலைமையில் தோ்தல் ஆணைய செயலா் சுந்தரவல்லி, பேரூராட்சிகளின் ஆணையா் ஆா்.செல்வராஜ், நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையா் சிம்ரன்ஜீத் காலோன் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், காலியாக உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பணியிடங்களைப் பூா்த்தி செய்யவும், வாா்டு மறுவரை, வாக்காளா் பட்டியல் தயாரித்தல், வாக்குச் சாவடிகள் அமைத்தல், வாக்குப் பதிவு இயந்திரங்களின் இருப்பு, தோ்தலில் கரோனா விதிகளைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com