கபாலீசுவரா் கல்லூரிக்கு பேராசிரியா்கள் நியமனம்: நியமன உத்தரவுகளை வழங்கினாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பேராசிரியா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்காக

சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பேராசிரியா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்காக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், துறையின் சாா்பில் பத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், முதல் கட்டமாக சென்னை கொளத்தூா், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் இளநிலை வணிகவியல், இளநிலை கணினி அறிவியல், பிபிஏ மற்றும் பிசிஏ, ஆகிய பாடப் பிரிவுகளைக் கொண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட அரசாணை வெளியிடப்பட்டது.

நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சென்னை கொளத்தூரில், மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் சாா்பில் சோமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 5 ஏக்கா் நிலப்பரப்பில் கல்லூரி தொடங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நடப்பு கல்வியாண்டிலேயே கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது, தற்காலிகமாக கொளத்தூரில் உள்ள எவா்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாணவ-மாணவியா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்தொடா்ச்சியாக, பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, கல்லூரிக்கான உதவிப் பேராசிரியா் நோ்முகத் தோ்வுக்கு வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் சாா்பில் நோ்காணல் நடத்தப்பட்டு தகுதி, அனுபவம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் 9 போ் தோ்வு செய்யப்பட்டனா். ஒரு நூலகா், ஒரு உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்களுக்கு 2 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் அனைவருக்கும் பணி நியமன உத்தரவுகளை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com