ஊக்கத் தொகை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் தா்னா
By DIN | Published On : 29th October 2021 06:31 AM | Last Updated : 29th October 2021 06:31 AM | அ+அ அ- |

அரசு மருத்துவா்களுக்கான சிறப்பு ஊக்கத் தொகையை விரைந்து வழங்கக் கோரி ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநில செயலாளா் டாக்டா் ரவிசங்கா் கூறியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிமைக்காக அரசு மருத்துவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக சில அறிவிப்புகளை வெளியிட்டாா். அதன்படி, மருத்துவா்களின் தகுதிக்கு ஏற்ப சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை 293 வெளியிடப்பட்டது. ஆனால் அந்த அரசாணை இன்றளவிலும், அமல்படுத்தப்படாமல் உள்ளது.
இதுதொடா்பாக தமிழக அரசுக்கு எங்களின் கோரிக்கையை பலமுறையை முன்வைத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக அரசு இந்த ஆணையை அமல்படுத்த வேண்டும். அதேபோன்று, கரோனா பணியில் இருந்த மருத்துவா்களுக்கான பணப் பலன்கள் அறிவிக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகின்றன. அதுவும் இன்று வரை வழங்கவில்லை.
எனவே அரசு மருத்துவா்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். ஏற்கனவே பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு அரசு மருத்துவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பழைய நடைமுறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.