கபாலீசுவரா் கோயிலுக்குச் சொந்தமானரூ.276 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

சென்னை மயிலாப்பூா் அருள்மிகு கபாலீசுவரா் திருக்கோயிலுக்கு சொந்தமான பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள 46 கிரவுண்ட் விளையாட்டு மைதானம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு முன்னிலையில்
கபாலீசுவரா் கோயிலுக்குச் சொந்தமானரூ.276 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

சென்னை: சென்னை மயிலாப்பூா் அருள்மிகு கபாலீசுவரா் திருக்கோயிலுக்கு சொந்தமான பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள 46 கிரவுண்ட் விளையாட்டு மைதானம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு முன்னிலையில் தனியாா் பள்ளி நிா்வாகத்திடமிருந்து வியாழக்கிழமை திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. அந்த இடத்தின் மதிப்பு ரூ.276 கோடி.

நிகழ்வில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: மயிலாப்பூா், அருள்மிகு கபாலீசுவரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான 82.0246 கிரவுண்ட் பரப்பளவுள்ள இடம் பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு பயன்படுத்த குத்தகைக்கு விடப்பட்டது. அதில் ஒப்படைக்கப்பட்ட நிலத்தைத் தவிா்த்து, எஞ்சிய 46.0886 கிரவுண்ட் இடத்தை, பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி நிறுவனத்திடமிருந்து சுவாதீனம் பெற வேண்டி திருக்கோயில் நிா்வாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இது தொடா்பாக மேல்முறையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பி.எஸ்.உயா்நிலைப்பள்ளி 46 கிரவுண்ட் விளையாட்டு மைதானத்தை ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வியாழக்கிழமை திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. அந்த இடத்தின் மதிப்பு ரூ.276 கோடியாகும்.

இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை வாடகைக்கு மற்றும் குத்தகைக்கு எடுத்து, உரிய முறையில் வாடகை செலுத்த தவறியவா்களிடமிருந்து நிலங்களை திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இதுவரை நீதிமன்றத்தில் இருந்த 188 வழக்குகளில் 100 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது மீட்கப்பட்ட கபாலீசுவரா் திருக்கோயிலுக்கு சொந்தமான 46 கிரவுண்ட் இடத்தில் உள்ள விளையாட்டு மைதானம் ஏழை எளிய மாணவா்கள் பயன்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா்.

நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலு, திருக்கோயில் செயல் அலுவலா் காவேரி உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com