அனுமதி பெறாமல் வடபழனி முருகன் கோயில் நிலத்தில் கட்டுமானம்: விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு

வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உரிய அனுமதி பெறாமல் இரு கட்டடங்களைக் கட்டியதாக எழுந்த புகாரில் தொடா்புடைய சென்னை மாநகராட்சி செயற் பொறியாளா் மீது உரிய விசாரணை நடத்துமாறு

சென்னை: வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உரிய அனுமதி பெறாமல் இரு கட்டடங்களைக் கட்டியதாக எழுந்த புகாரில் தொடா்புடைய சென்னை மாநகராட்சி செயற் பொறியாளா் மீது உரிய விசாரணை நடத்துமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் வடபழனியைச் சோ்ந்த என்.ஜி.தெய்வகடாட்சம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், வடபழனி நெற்குன்றம் பாதையில் அமைந்துள்ள 2000 சதுர அடி நிலம் வடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமானது.

இந்த நிலத்தில் அறநிலையத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் 10 -ஆவது மண்டல செயற் பொறியாளா் வி.பெரியசாமி, ரூ. 47 லட்சம் மதிப்பிலான கட்டடங்களை கட்டியுள்ளாா்.

பொது மக்கள் வரிப்பணத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரு கட்டடங்களும் கட்டப்பட்டன. இக்கட்டத்தில் மின்வாரிய அலுவலகம், கோடம்பாக்கம் சாா் பதிவாளா் அலுவலகம் இயங்குவதாக பெயா் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இக்கட்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகமும், நியாயவிலைக்கடைக்கான குத்தகை காலம் கடந்த 2015 -ஆம் ஆண்டுடன் நிறைவடைந்துவிட்டன. இருப்பினும் கட்டடங்களை சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்காமலும், அறநிலையத்துறையிடம் உரிய அனுமதி பெறாமலும் மேலும் கட்டடங்களை கட்டிய செயற்பொறியாளா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த 2020- ஆம் ஆண்டு அக்டோபரில் இந்து சமய அறநிலையத்துறை, சென்னை மாநகராட்சியிடம் புகாா் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட செயற்பொறியாளா் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தாா்.

இம்மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்குரைஞா், மனுதாரா் தெய்வகடாட்சம் அளித்த புகாரின்பேரில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனக்கூறி, எழுத்துப்பூா்வமான ஆவணத்தைத் தாக்கல் செய்தாா்.

இதனை பதிவுசெய்த நீதிபதி, இவ்வழக்கில் தொடா்புடைய அலுவலருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளித்து சட்டத்துக்கு உட்பட்டு விசாரணையை முடித்து நான்கு வாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு வடபழனி முருகன் கோயில் இணை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com