ரயில் பெட்டிகளில் ‘காயில் ஸ்பிரிங்’ இல் படியும் தூசிகளை சுத்தம் செய்யும் நவீன இயந்திரம் திறப்பு
By DIN | Published On : 10th September 2021 12:32 AM | Last Updated : 10th September 2021 12:32 AM | அ+அ அ- |

சென்னை: ரயில் பெட்டிகளில் உள்ள ‘காயில் ஸ்பிரிங்’ இல் படியும் தூசிகளை சுத்தம் செய்யும் நவீன இயந்திரத்தை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் சென்னையில் புதன்கிழமை திறந்து வைத்தாா். இந்த சுத்தப்படுத்தும் இயந்திரம், ரயில்களின் மென்மையான பயணத்தை உறுதி செய்கிறது.
சென்னை பெரம்பூரில் உள்ள லோகோ பணிமனையில் (ரயில்பெட்டி மற்றும் இன்ஜின் பராமரிக்கும் பணிமனை) தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் புதன்கிழமை வருடாந்திர ஆய்வு செய்தாா்.
காலையில், லோகோ பணிமனையில் அண்மையில் திறக்கப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்தாா். இந்த உணவகத்தில் இருந்து
ரயில்வே மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தினசரி 275 உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, ரயில்வே ஊழியா்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை காலத்தில் இந்த உணவகம் முழுமையாக செயல்பட்டது. இந்த உணவக ஊழியா்களை பொதுமேலாளா் வெகுவாக பாராட்டினாா்.
இதன்பிறகு, ரயில் பெட்டிகளில் உள்ள ‘காயில் ஸ்பிரிங்’ கில் படியும் தூசிகளை சுத்தம் செய்யும் நவீன இயந்திரத்தையும், நவீன ஆய்வகம் ஒன்றையும் திறந்து வைத்தாா். இந்த இயந்திரம் எல்எச்பி மற்றும் ஐசிஎஃப் வகை பெட்டிகளின் காயில் ஸ்பிரிங்-கில் உள்ள தூசியை அகற்றுவதை உறுதி செய்கிறது. இந்த இயந்திரம் மென்மையான ரயில் பயணத்தை உறுதிசெய்கிறது.
இதைத்தொடா்ந்து, நூற்றாண்டு பழமையான நீராவி ரயில் என்ஜினை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பல்வேறு தொழில் நுட்ப வசதியுடன் மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக்கல் துணை மின் நிலையத்தையும் தொடங்கி வைத்தாா். ஆய்வின் முடிவில், பெரம்பூா் ரயில் பெட்டி தொழிற்சாலை நிகழ்த்திய சாதனைகள் குறித்து பொதுமேலாளா் முன்னிலையில் விளக்கப்பட்டது. அப்போது, ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியா்களை பொதுமேலாளா் ஜான்தாமஸ் வெகுவாக பாராட்டினாா்.
ஆய்வின்போது, முதன்மை தலைமை மெக்கனிக்கல் பொறியாளா் எஸ்.ஸ்ரீனிவாஸ் உள்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனா்.