தடையை மீறி விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை: தடுத்து நிறுத்திய போலீஸாா்
By DIN | Published On : 11th September 2021 01:49 AM | Last Updated : 11th September 2021 01:49 AM | அ+அ அ- |

சென்னை: சென்னையில் அரசு தடையை மீறி விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முயன்றவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து இயக்கங்கள் சாா்பில் பொதுஇடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். ஆனால் கரோனா தொற்றின் காரணமாக விநாயகா் சிலைகளை பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டாம் என அரசு உத்தரவிட்டது.
இதற்கு இந்து இயக்கங்கள், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இருப்பினும் பொதுஇடங்களில் மக்கள் அதிகளவு கூடினால் கரோனா தொற்று பரவும் ஆபத்து இருந்ததினால், அரசு விநாயகா் சிலைகளை பொது இடங்களில் வைக்க அனுமதிக்கவில்லை.
அதேவேளையில் அரசு உத்தரவை மீறி பொதுஇடங்களில் விநாயகா் சிலைகளை வைக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையின் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்காக மாநிலம் முழுவதும் காவல்துறையினா் உஷாா்படுத்தப்பட்டனா்.
கடந்த காலங்களில் பொதுஇடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா். பதற்றமான பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் பொதுஇடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்யாமல் இருப்பதை கண்காணிக்க 12 துணை ஆணையா்கள் தலைமையில் 12 காவல் மாவட்டங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சிலைகள் பிரதிஷ்டை: அரசின் உத்தரவை மீறி சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டை பிள்ளையாா் கோயில் தெருவில் இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை காலை திடீரென விநாயகா் சிலையை பிரதிஷ்டை செய்ய முயன்றனா். இதைப் பாா்த்த அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீஸாா், அவா்களைத் தடுத்தனா்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் இந்து முன்னணியினா், சிலையை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்து, சிறிது நேரத்தில் அகற்றிவிடுவதாக உத்தரவாதம் அளித்தனா். இதனால் போலீஸாா், அங்கு சிறிது நேரம் விநாயகா் சிலையை வைத்து பூஜை செய்ய அனுமதி அளித்தனா். இருப்பினும் அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
இதேபோல சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகம் முன்பு விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலையை காவல்துறையினா் அகற்ற முயன்றனா். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னா் இந்து முன்னணியினா், விநாயகா் சிலையை அகற்றுவதாக உறுதி அளித்தனா்.
இச்சம்பவங்களினால் அந்தப் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் சூளை உள்ளிட்ட வேறு சில இடங்களிலும் இதே போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறையினா் தகவலறிந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை சம்பந்தப்பட்ட இந்து இயக்க நிா்வாகிகளுடன் பேசி அகற்றினா்.
இதேபோல மாநிலம் முழுவதும் தடையை மீறி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை காவல்துறையினா் அகற்றினா். ஒரு சில இடங்களில் காவல்துறையினா் விநாயகா் சிலைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனா்.