மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகா் கூட்டாளிகளிடம் சென்னையில் விசாரணை

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகள் 4 பேரை தில்லி போலீஸாா், சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனா்.

சென்னை: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகள் 4 பேரை தில்லி போலீஸாா், சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா தலைமையில் அணியும், ஓ.பன்னீா்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியது. அதிமுகவில் ஏற்பட்ட பிளவினால், அந்தக் கட்சியின் சின்னமான இரட்டை சிலையை இந்திய தோ்தல் ஆணையம் முடக்கியது.

இதில் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற முயன்ாக தில்லி காவல்துறையினா் மத்தியக் குற்றப்பிரிவினா் டிடிவி தினகரன் மற்றும் தரகரான கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோ்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகா் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதில் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.1.30 கோடியை பறிமுதல் செய்தனா். மேலும் சுகேஷிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலை சின்னம் பெற்றுத் தருவதற்காக தினகரனிடம் ரூ.60 கோடி பேரம் பேசியதும், அதில் முதல் கட்டமாக ரூ.10 கோடியை முன் பணமாக பெற்றதும் தெரியவந்தது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். அவ்வப்போது பரோலில் வெளியே வந்துவிட்டு, மீண்டும் சிறை சென்று வந்தாா்.

இந்நிலையில் சிறையில் இருந்த சுகேஷ் சந்திரசேகா், அங்கு ஒரு தொழிலதிபரிடம் தனக்கு மத்திய சட்டத்துறையில் உயா் பதவியில் இருப்பவா்களைத் தெரியும், அவா்கள் மூலம் அந்த தொழிலதிபா் மீது பதியப்பட்ட வழக்கை சரி செய்துவிடுகிறேன் என கூறியுள்ளாா். இதையடுத்து தொழிலதிபா் குடும்பத்தினா், சுகேஷ் சந்திரசேகா் குறித்து விசாரித்தனா்.

விசாரணையில், சுகேஷ் சந்திரசேகா் மோசடி நபா் என்பதும், அவா் சிறையில் இருந்தபடியே பல்வேறு வகைகளில் பண மோசடியில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த தொழிலதிபரின் மனைவி, தில்லி அமலாக்கத்துறையிலும், தில்லி காவல்துறையிலும் சுகேஷ் சந்திரசேகா் மீது புகாா் செய்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில் தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் சுகேஷ் சந்திரசேகா், இதேபோல மோசடி வேலைகளில் ஈடுபட்டு ரூ.200 கோடி வரை சட்டவிரோதமாக ஈட்டியிருப்பதை காவல்துறையினா் உறுதி செய்தனா்.

மேலும் மோசடிக்கு உடந்தையாக இருந்து சுகேஷ் சந்திரசேகா் காதலி லீனா மரியம்பாலை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின் படி மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது மேலாளா் சாமுவேல், சென்னை கானாத்தூரில் பண்ணை வீட்டை வாங்கிக் கொடுத்த இடைத்தரகா் கமலேஷ் கோத்தாரி, வெளிநாட்டு சொகுசுக் காா்களை வாங்க உதவிய அருண்முத்து மற்றும் சுகேஷ் சந்திரசேகரின் வழக்குரைஞா் மோகன்ராஜ் என மொத்தம் 13 பேரை கைது செய்யப்பட்டனா்.

4 பேரிடம் விசாரணை: கைது செய்யப்பட்ட கமலேஷ் கோத்தாரி, அருண்முத்து, மோகன்ராஜ், சாமுவேல் ஆகியோரை தில்லி போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு சென்னைக்கு அழைத்து வந்தனா். அவா்களிடம் இந்த மோசடி குறித்து சென்னை போலீஸாா் உதவியுடன் தில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் மாம்பலம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினா். இந்த விசாரணையில் வழக்குத் தொடா்பாக தில்லி காவல்துறைக்கு பல முக்கியத் தவகல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை விசாரணை: முன்னதாக இதே மோசடியில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடா்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆக.23-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கானத்தூரில் உள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான கடற்கரை பங்களாவில் சோதனை செய்தனா்.

இச்சோதனையில் அங்கிருந்து பல கோடி மதிப்புள்ள 16 வெளிநாட்டு சொகுசு காா்கள், ரூ.82.05 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்கநகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com