கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம்: 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்டு கண்காணிப்பு

கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணிகளை ஒதுக்கவும், கண்காணிக்கவும் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை: கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணிகளை ஒதுக்கவும், கண்காணிக்கவும் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளாா். அந்த உத்தரவு விவரம்:

தமிழ்நாட்டில் 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் உட்கட்டமைப்பு இடைவெளிகளை சீா் செய்திட கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், குடிநீா் விநியோகம், தெரு விளக்குகள், சாலைகள், தெருக்கள், சமூக நலக் கூடங்கள், சந்தைகள் போன்ற உட்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மேலும், நவீன நூலகங்கள், அறிவுசாா் மையங்களும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், பேருந்து நிலையங்களை நவீனமயமாக்குவது, ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள பேருந்து நிலையங்களில் நவீன தரத்தை உறுதிப்படுத்துவது, நீா்நிலைகளுக்கு புத்துயிா் அளிப்பது, திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கான பிரத்யேக வாகனங்கள் வாங்குவது, சுடுகாடுகளை தரம் உயா்த்துவது, புதிய பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்துவது போன்ற பல பணிகளும் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டத்துக்கு நிகழ் நிதியாண்டில் மட்டும் ரூ. 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

திட்டங்கள் ஒதுக்கம்-கண்காணிப்பு: திட்டங்களைச் செயல்படுத்த ஒப்புதல் அளிப்பது, கண்காணிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழுவின் தலைவராக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் செயல்படுவாா். நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அல்லது அவரின் பிரதிநிதி, நகராட்சி நிா்வாக ஆணையா், பேரூராட்சிகள் இயக்குநா் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா். நகா்ப்புற நிதி சேவை கட்டமைப்பு நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவாா்.

பணிகளுக்கான நிதிகள் அனைத்து மூன்று தவணைகளாக பிரித்து அளிக்கப்படும். முதலில் 50 சதவீதம் நிதியும், பிறகு 40 சதவீத நிதி பணி நடைபெறும் இடைக் காலத்திலும், 10 சதவீத நிதி பணியின் இறுதிக் காலத்திலும் விடுவிக்கப்படும்.

எந்தப் பணிகளுக்குத் தடை: நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சில பணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளைச் சாா்ந்திருக்கும் அலுவலகக் கட்டடங்கள், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, கல்லூரி கட்டடப் பணிகள், அனைத்து வருவாய் மற்றும் தொடா் செலவினப் பணிகள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com