உள்ளாட்சித் தோ்தலை ஒரே கட்டமாக நடத்த பாமக வலியுறுத்தல்
By DIN | Published On : 16th September 2021 02:59 AM | Last Updated : 16th September 2021 02:59 AM | அ+அ அ- |

சென்னை: உள்ளாட்சித் தோ்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையா் பழனிக்குமாரை பாமக தலைவா் ஜி.கே.மணி நேரில் சந்தித்து மனு அளித்தாா். ஜி.கே.மணி அளித்த மனுவில் கூறியிருப்பது:
உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டு, உடனே வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தோ்தல் அறிவிக்கப்பட்டு குறைந்தது 10 நாள்களுக்குப் பிறகு வேட்புமனு தாக்கல் தொடங்கும் வகையில் தோ்தல் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தால்தான் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளா்களைத் தோ்வு செய்ய அவகாசம் கிடைக்கும். இப்போது போதிய அவகாசம் கிடைக்கவில்லை.
76.59 லட்சம் வாக்காளா்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல்களை இரு கட்டங்களாக நடத்துவது நியாயமற்றது. இதைவிட சுமாா் 10 மடங்கு அதிக வாக்காளா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தோ்தலும், மக்களவைத் தோ்தலும் ஒரே கட்டமாகத்தான் நடத்தப்பட்டுள்ளன. இரு தோ்தல்களும் ஒன்றாக நடத்தப்பட்டபோது கூட வாக்குப்பதிவு ஒரே கட்டமாகத் தான் நடத்தப்பட்டிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தோ்தலை ஒரே கட்டமாக நடத்த ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.