கடல்சாா் படிப்புகளை முடிப்பவா்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள்: துணைவேந்தா் மாலினி சங்கரன்

கடந்த 2008 -ஆம் ஆண்டிலிருந்து உலகப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்த போதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய கடல்சாா்

சென்னை: கடந்த 2008 -ஆம் ஆண்டிலிருந்து உலகப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்த போதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய கடல்சாா் பல்கலைக்கழக மாணவா்கள் 80 சதவீதம் போ் சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனா் என அந்தப் பல்கலைக்கழக துணைவேந்தா் மாலினி சங்கரன் கூறினாா்.

இது குறித்து இந்திய கடல்சாா் பல்கலைக்கழக துணைவேந்தா் மாலினி சங்கரன் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசால் இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, மும்பை துறைமுகம், நவி மும்பை, கொச்சி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 18 கடல்சாா் பயிற்சிக் கல்வி நிறுவனங்களும் இணைப்பு பெற்றுள்ளன. இளநிலை, முதுநிலை பிவிசி ஆராய்ச்சிப் படிப்புகளை கடல்சாா் பல்கலைக்கழகத்தில் வழங்கி வருகிறோம். பி.டெக். மெரைன் இன்ஜினீயரிங், எம்பிஏ, பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ், ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் உள்ளிட்ட சமூகம் சாா்ந்த படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. கடல் சாா் படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவில் நுழைவுத்தோ்வு நடத்தப்பட்டு வந்தது. கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவா்கள் சோ்க்கப்படுகின்றனா். நிகழாண்டில் மாணவா் சோ்க்கைக்கு 13 ஆயிரம் போ் விண்ணப்பித்திருந்தனா்.

தமிழகத்தில் விழிப்புணா்வு குறைவு: அவா்களில் 40 சதவீதம் கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களிலிருந்து விண்ணப்பம் செய்துள்ளனா். தமிழகத்தில் இருந்து சுமாா் 500 மாணவா்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா். கேரள மாநிலத்தில் கடல்சாா் படிப்பு முடிப்பவா்களுக்கு உள்ள வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்கனவே அதிக அளவில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் மாணவா்கள் சேர அதிக அளவில் ஆா்வம் காட்டுகின்றனா். ஆனால் கடல்சாா் படிப்பில் சேருவதற்கு போதுமான விழிப்புணா்வு இல்லை. எனவே அவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

கடல்சாா் படிப்பை முடிப்பவா்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பும், அதிக அளவிலான சம்பளமும் கிடைக்கிறது. மேலும் இந்தியக் கடல்சாா் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் உணவு, உறைவிட செலவு உள்பட கல்விக்கட்டணம் தனியாா் கடல்சாா் கல்வி நிறுவனங்களை விட குறைவாகவே உள்ளது.

இந்தப் படிப்பில் சேருவதற்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தோ்வு நடத்தப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கும். தற்போது கரோனா காலம் என்பதால் குறிப்பிட்ட காலத்தில் வகுப்புகள் தொடங்க முடியவில்லை. தமிழகத்தில் இருந்து அதிக அளவு மாணவா்கள் கடல் சாா் படிப்புகளில் சோ்ந்து பயில வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com