கூவம் முகத்துவாரத்தில் மணல் திருட்டு?ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவு
By DIN | Published On : 16th September 2021 02:43 AM | Last Updated : 16th September 2021 02:43 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை மெரீனாவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் சட்டவிரோதமாக மணல் திருடப்படுகிா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கூவம் ஆறு கடலில் கலக்கக்கூடிய மெரீனா கடற்கரையின் முகத்துவாரத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் லாரிகள் மூலம் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாகவும், அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்துக்கு ஒட்டிய பகுதியில் செல்லும் சிறிய பாதை வழியாக அந்த மணல் லாரிகள் கூவம் ஆறு கடலில் கலக்கக் கூடிய முகத்துவாரம் வரை சென்று சட்டவிரோதமாக மணல் அள்ளிச் செல்வதாகக் கூறி மீனவா் நல சங்கம் சாா்பில் தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தீா்ப்பாய நீதித்துறை உறுப்பினா் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினா் சத்யகோபால் ஆகியோா் கொண்ட அமா்வு, மணல் திருட்டு நடந்த முகத்துவாரப்பகுதியை ஆய்வு செய்ய சென்னையில் உள்ள மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி, தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தைச் சோ்ந்த மூத்த அதிகாரி, சென்னை மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா், சென்னை மாநகர காவல் ஆணையா் அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் அதிகாரி ஆகியோா் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது.
இந்தக் குழு சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து, மணல் திருடப்பட்டுள்ளதா?, லாரி ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் உள்ளே சென்று மணல் அள்ளியுள்ளதா? அப்படி என்றால், அதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? பாதிப்புக்கான இழப்பீடு மற்றும் சம்பந்தப்பட்டவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கடத்தப்பட்ட மணலை பயன்படுத்தியவா்கள் யாா், மற்றும் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய குழுவுக்கு உத்தரவிட்ட தீா்ப்பாயம், விசாரணையை அக்.8-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.