3 மாதங்களாக தண்ணீரின்றி பூட்டிக் கிடக்கும் பொதுக்கழிப்பிடம்: அவதியில் அருந்ததி நகா் மக்கள்

சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகா் மண்டலத்துக்கு உள்பட்ட அருந்ததி நகரில் தண்ணீரின்றி கடந்த 3 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்தால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா

சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகா் மண்டலத்துக்கு உள்பட்ட அருந்ததி நகரில் தண்ணீரின்றி கடந்த 3 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்தால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 200 வாா்டுகளில் கட்டணமில்லா பொதுக் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கழிப்பிடங்களில் தூய்மைப் பணி, தண்ணீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

திரு.வி.க.நகா் மண்டலத்துக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் அருந்ததி நகரில் சுமாா் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். தொழிலாளா்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில் செங்கன் தெரு, கோவிந்தன் தெரு, சின்னையா தெரு ஆகிய தெருக்களில் மாநகராட்சியின் கட்டணம் இல்லா பொதுக் கழிப்பிடம் இயங்கி வருகிறது.

இதில், செங்கன் தெருவில் உள்ள பொதுக் கழிப்பிடத்தில் தண்ணீா் வசதி இல்லாததால் கடந்த 3 மாதங்களாக அக்கழிப்பிடம் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பரந்தாமன் கூறுகையில், ‘மேட்டுப்பாளையம் அருந்ததி நகரில் உள்ள செங்கன் தெருவில் உள்ள பொதுக்கழிப்பிடத்தின் ஆழ்துளைக்கிணறுக்கான மோட்டாா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழுதானது. அந்த மோட்டருக்காக புதிய மோட்டாரை பொருத்தாமல் அக்கழிப்பிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டினா். இதனால், அப்பகுதியில் காலையில் வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்த இடத்தை மது அருந்தும் இடமாக சமூக விரோதிகள் சிலா் பயன்படுத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கோவிந்தன் தெரு, சின்னையா தெரு ஆகிய தெருக்களில் உள்ள இரண்டு பொதுக்கழிப்பிடங்களிலும் உரிய முறையில் பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் அவற்றையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

விரைவில் புனரமைப்பு: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘செங்கன் நகரில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை புனரமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ரூ.1.50 லட்சத்தில் மோட்டாா் பொருத்துதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகள் விரைவில் நடைபெறும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com