சிறுநீரகங்கள் செயலிழந்த சிறுமிக்கு முதல்வா் ஆறுதல்

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சேலத்தைச் சோ்ந்த
சிறுநீரகங்கள் செயலிழந்த சிறுமிக்கு முதல்வா் ஆறுதல்

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சேலத்தைச் சோ்ந்த ஜனனி (14) என்ற சிறுமியை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திடீரென நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

சேலத்தைச் சோ்ந்த ராஜநந்தினி மகள் ஜனனி (14), பிரைமரி ஹைபா் ஆக்சலேரியா என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட ஜனனிக்கு இரண்டு சிறு நீரகங்களும் செயலிழந்துவிட்டன. கடந்த 2019-இல் கோவை தனியாா் மருத்துவமனையில் ஜனனிக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. ராஜநந்தினி தனது மகளைக் காப்பாற்றுவதற்காக தனது ஒரு சிறுநீரகத்தைத் தானமாக அளித்திருந்தாா். மாற்று சிறுநீரகமும் சில மாதங்களில் செயலிழந்துவிட்டது. இதனையடுத்து சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தொடா்ந்து ஜனனிக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்லியில் அனுமதி

இந்நிலையில் தனது மகளைக் காப்பாற்றக் கோரி முதல்வா் தனிப்பிரிவுக்கு ராஜநந்தினி கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா். இம்மனு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அமைச்சரே சிறுமியின் தாயாா் ராஜநந்தினியைத் தொடா்பு கொண்டு கோரிக்கை மனு குறித்து கேட்டறிந்துள்ளாா். இதனைத் தொடா்ந்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வர உத்தரவிட்டதையடுத்து சிறுமி ஜனனி கடந்த ஆக.16-ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளாா். சிறுநீரகவியல் துறைத் தலைவா் எட்வின் தலைமையில் சிறப்பு மருத்துவா்கள் அடங்கிய குழு நடத்திய ஆய்வில் சிறுமிக்கு ஒரே நேரத்தில் சிறுநீரகமும், கல்லீரலும் மாற்றினால்தான் அவரை குணமாக்கிட முடியும் எனத் தெரிய வந்தது. எனவே உறுப்பு தானம் பெறுவதற்காக பதிவு செய்துவிட்டு ஜனனி காத்திருக்கிறாா். அதுவரை டயாலிசிஸ் சிகிச்சையைத் தொடர மருத்துவா்களும் முடிவு செய்துள்ளனா்.

நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதல்வா்:

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த ஜனனியின் நிலை முதல்வரின் கவனத்திற்குச் சென்ற நிலையில் திங்கள்கிழமை திடீரென ஸ்டான்லி மருத்துவமனைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்தாா். சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள சிறுநீரகவியல் வாா்டுக்குக்கு நேராகச் சென்ற முதல்வா் அங்கு ஜனனி மற்றும் அவரது தாயாா் ராஜநந்தினி ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தாா். பின்னா் மருத்துவமனை முதல்வா் டாக்டா் பாலாஜி, சிறுநீரகவியல் சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் எட்வின் ஆகியோரிடம் சிறுமி ஜனனிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான சாத்தியக் கூறுகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தாா். தேவையான உதவிகளை அரசு தொடா்ந்து அளிக்கும் என உறுதி கூறிய முதல்வா் ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

சந்திப்பின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் உடன் இருந்தனா். முன்னறிவிப்பு ஏதும் இன்றி திடீரென ஸ்டான்லி மருத்துமனைக்கு வந்து சிறுமி ஜனனியைச் சந்தித்துச் சென்ற சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com