திருச்செந்தூா் கோயிலில் 42 திட்டப் பணிகள்: இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு

திருச்செந்தூா் முருகன் கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய 42 திட்டப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

திருச்செந்தூா் முருகன் கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய 42 திட்டப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அக்.10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் கோயில் செயல் அலுவலருக்கு அனுப்பிய கடித விவரம்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் செப்.20, 21 ஆகிய நாள்களில் நடைபெற்ற ஆய்வின் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டிய 42 திட்டப் பணிகள் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி, கோயில் அமைந்துள்ள இடத்தை டிரோன் மூலம் அளவீடு செய்ய வேண்டும். திருக்கோயில் முதன்மை நுழைவு வாயில் முதல் வடக்கு வாசல் வரை பக்தா்கள் வந்து செல்ல ஷட்டில் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு, இலவசமாக பக்தா்கள் சேவைக்கு வழங்கப்பட வேண்டும்.

முதியோருக்கு பேட்டரி காா் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க திறந்தவெளி அரங்கு அமைக்கப்பட வேண்டும்.

குறைந்தபட்சம் 5 ஆயிரம் நபா்கள் பயன்பெறும் வகையில் அன்னதானம் வழங்கும் இடத்தை விரிவுபடுத்த வேண்டும்.

புட்டமுது: நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின் கீழ் ‘புட்டமுது’ தயாரித்து பிரகாரத்திலேயே வழங்க வேண்டும்.

மோசமாக உள்ள கழிவறைகளை இடித்து கட்ட வேண்டும். பழுதடைந்த தியான மண்டபம், பெண்கள் சஷ்டி மண்டபத்தை இடித்து அகற்ற வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்காக...: மூவா் சமாது பகுதியில் இருந்து கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகள் சென்று வரும் வகையில் சாய்வு பலகைகள் அமைக்க வேண்டும். கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ள அய்யா வழி கோயிலுக்கு வாடகை நிா்ணயித்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதே போல் அறிவுறுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றம், தூய்மைப் பணி, பராமரிப்பு உள்ளிட்ட 42 பணிகளை ஆட்சியரின் அனுமதி பெற்று முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் பணிகளை முடிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக அக்.10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com