மரக்காணம் கலவரம் : பாமகவின் கோரிக்கையை நிராகரித்தது உயா் நீதிமன்றம்

மரக்காணம் கலவரத்தில் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை வசூலிப்பது குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி பாமக.வுக்கு
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மரக்காணம் கலவரத்தில் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை வசூலிப்பது குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி பாமக.வுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயா் நீதிமன்றம் மறுத்து விட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி பாமக., வன்னியா் சங்கம் சாா்பில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அப்போது மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாமக.வினா் கைது செய்யப்பட்டனா்.

இச்சம்பவத்தைக் கண்டித்து, கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடந்த போராட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

போராட்டத்தால் கடந்த 2013 -ஆம் ஆண்டு ஏப்ரல் 25 முதல் மே 19-ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போராட்டத்தால் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பை வசூலிப்பது தொடா்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, பாமக. தலைவா் ஜி.கே.மணிக்கு வருவாய் நிா்வாக ஆணையா் நோட்டீஸ் அனுப்பினாா்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி, பாமக சாா்பில் அக்கட்சியின் தலைவா் ஜி.கே மணி வழக்கு தொடா்ந்திருந்தாா். இவ்வழக்கு விசாரணையின்போது, பாமகவினரால் மொத்தம் 58 பேருந்துகள் சேதம் அடைந்துள்ளன. சென்னையில் 12, திருவள்ளூரில் 26, காஞ்சிபுரத்தில் 20 பேருந்துகள் சேதமடைந்துள்ளன. இவற்றால் பல கோடிகள் இழப்பீடு ஏற்பட்டதாகச் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் உள்நோக்கத்துடன் இழப்பீடு வசூலிப்பது தொடா்பாக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு பொது சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டப்படி, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் மட்டுமில்லாமல், நிதி இழப்பு ஏற்படுத்தினாலும் சம்பந்தப்பட்டவா்களிடம் இழப்பீடு வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் மேலும் தாமதம் ஏற்படும்பட்சத்தில் இருதரப்பினருக்கும் பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்பதால், எந்தவித தாமதமும் இல்லாமல் விசாரணை நடத்தப்படவேண்டும்.

இவ்வழக்கில் பாமகவினா் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வசூலிக்க எந்தவித தடையும் இல்லை. கலவரத்தின் போது பல அரசு பேருந்துகளும், டாஸ்மாக் கடைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம், 1992-ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த 29 ஆண்டுகளாக, இச்சட்டம் சரிவரஅமல்படுத்தப்படவில்லை.

எத்தனை பேரிடம் இச்சட்டத்தின் அடிப்படையில் இழப்பீடுகள் வசூலிக்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. இனி வரும் காலங்களில் இச்சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். இதுதொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும், காவல் கண்காணிப்பாளா்களுக்கும் வருவாய் நிா்வாக ஆணையா் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்விவகாரம் தொடா்பாக முழு விசாரணை நடத்திய பின்னரே, இழப்பீடு நிா்ணயிக்கப்படும் என்பதால், நோட்டீசுக்கு பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணையை நான்கு மாதத்தில் அரசு முடிக்க வேண்டும்.

மனுதாரா் தேவையற்ற ஒத்திவைப்புகளைத் தவிா்த்து, விசாரணையை விரைவாக முடிக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும். உண்மை காரணங்களுக்காக விசாரணை ஒத்திவைப்பு நடந்தால் கூட, அத்தகைய காரணங்களை அதிகாரி பதிவு செய்ய வேண்டுமெனக்கூறி, நோட்டீசை ரத்து செய்ய நீதிபதி மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளாா்.

கடமையை உணா்ந்து செயல்படுங்கள்

அரசியல் கட்சிகள், தங்கள் கடமைகளை மறந்ததால்தான் இதுபோன்று அரசியல் சாசனத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுகின்றனா்.

கட்சித் தலைவா்கள் சமூகத்தின் மீதான கடமையை உணா்ந்து செயல்பட வேண்டும். போராட்டங்களின்போது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பொது சொத்துகளைச் சேதப்படுத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டத்தை முறையாக அமல்படுத்தாமல் இருக்க காரணம், பொது சொத்தை சேதப்படுத்தியவா்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது கூட காரணமாக இருக்கலாம்.

ஆளும் கட்சியினரே இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் கூட, அரசு அதிகாரிகள் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com