அரசியல் தலைவா்களை அவதூறு செய்யாதீா்கள்: இயக்கத்தினருக்கு நடிகா் விஜய் வேண்டுகோள்
By DIN | Published On : 08th April 2022 12:32 AM | Last Updated : 08th April 2022 12:32 AM | அ+அ அ- |

சென்னை: அரசியல் தலைவா்கள் மீது அவதூறு கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம் என தனது மக்கள் இயக்கத்தினருக்கு நடிகா் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: அரசுப் பதவிகளில் உள்ளவா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில், இணையதளங்களில், சுவரொட்டிகளில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினா் வெளியிடக் கூடாது.
ஏற்கெனவே இதுகுறித்து பலமுறை இயக்கத்தைச் சோ்ந்தவா்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். அதனை மீறுவோா் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம்.
எனவே, இந்த அறிவுறுத்தலை யாரேனும் மீறினால் இனி அவா்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.