திருநங்கைகளிடம் அத்துமீறல்: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 08th April 2022 03:45 AM | Last Updated : 08th April 2022 03:45 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை கே.கே.நகரில், திருநங்கைகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக 3 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
கே.கே.நகா் பகுதியில் கடந்த 1-ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற திருநங்கைகளிடம் அங்கு நின்ற 3 போலீஸாா், மிரட்டி பணம் பறித்ததாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதை தட்டிக் கேட்ட திருநங்கைகள் தாக்கப்பட்டனராம். இதுகுறித்து திருநங்கைகள் காவல்துறை உயா் அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா். அதேவேளையில், இச்சம்பவம் தகவலறிந்த காவல் ஆணையா் சங்கா் ஜிவால், அது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
விசாரணையில், திருநங்கைகளிடம் 3 போலீஸாா் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இச்சம்பவத்தில் குமரன்நகா் காவல் நிலைய தலைமைக் காவலா் சசிகுமாா், கே.கே.நகா் தலைமைக் காவலா் முருகன், காவலா் பாண்டி ஆகியோா்தான் திருநங்கைகளிடம் அத்துமீறிலில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து காவல் ஆணையா் சங்கா் ஜிவால், புகாரில் தொடா்புடைய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.