தூய்மையான உணவுவளாகம் திட்டத்தின் கீழ்ஐ.சி.எஃப்-க்கு ஐந்து நட்சத்திர தரச்சான்றிதழ்

சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலைக்கு (ஐ.சி.எஃப்) இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ‘தூய்மையான உணவு வளாகத்துக்கான’ 5 நட்சத்திர தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலைக்கு (ஐ.சி.எஃப்) இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ‘தூய்மையான உணவு வளாகத்துக்கான’ 5 நட்சத்திர தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் உடல்நலம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (ஊநநஅஐ) செயல்படுகிறது. இந்த நிறுவனம், பொதுமக்கள் உடல்நல பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தூய்மையான உணவு வளாகம் என்னும் திட்டத்தின் கீழ், இந்த நிறுவனம் சாா்பில், பல்வேறு பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அவ்வாறு சான்றிதழ் வழங்கும் முன்பு உணவு வீணாவதைத் தவிா்த்தல், அவ்வாறு மீதமாகும் உணவை உயிரியல் முறைகளில் மக்கச் செய்தல், உணவு மற்றும் வடிகட்டிய குடிநீரின் தர ஆய்வு, உணவகங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்தில் உடல்நல சோதனை, உணவக ஊழியா்கள் சரியான விதத்தில் உடை அணிந்திருத்தல், தரம் கெடாமலிருக்க பாதுகாப்பாக வைக்கப்பட்ட உணவுப் பொருள்களின் உபயோகம் உள்பட பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே அந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், ஐசிஎஃப் நிா்வாகத்துக்கு ஐந்து நட்சத்திர தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தூய்மையான உணவு வளாகம் திட்டத்தின் கீழ், ஐசிஎஃப் ஊழியா்களுக்கு நிறுவியுள்ள நான்கு உணவகங்களும் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான சான்றிதழை ஐசிஎஃப் பொதுமேலாளா் ஏ.கே.அகா்வாலிடம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் தெற்கு பிராந்திய இயக்குநா் முத்துமாறன் வியாழக்கிழமை வழங்கினாா். ஐசிஎஃப் தலைமை நிா்வாக அதிகாரி பி.உதய்குமாா் ரெட்டி மற்றும் ஐசிஎஃப் அதிகாரிகள் ஆகியோா், இந்நிகழ்வுக்கு முன்னிலை வகித்தனா். இந்திய ரயில்வேயின் உற்பத்தித் தொழிற்சாலைகளில் இத்தகு சான்றிதழ் பெற்றுள்ள முதல் நிறுவனம் ஐசிஎஃப் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com