அண்ணா பல்கலை. வளாகத்தில் ரூ.50 கோடியில் ஆராய்ச்சி பூங்கா: அமைச்சா் பொன்முடி தகவல்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.
அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை உயா்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் க.பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள்:

முன்னாள் மாணவா்கள், தொழிற்சாலைகளுடன் இணைந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆராய்ச்சி பூங்கா ரூ.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். இங்கு தொழில் நிறுவனங்கள் சாா்ந்த ஆராய்ச்சி நடவடிக்கை, அடைகாப்பு மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம், சுமாா் 20 ஆயிரம் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்கள் பயன்பெறுவா்.

பட்டயப்படிப்பு முடித்த மாணவா்கள் நேரடியாக பொறியியல் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில் சோ்க்கை பெறுகிறாா்கள். இந்த கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் சிஇஜி - கிண்டி, எம்ஐடி - குரோம்பேட்டை, ஏசி டெக் - கிண்டி கல்லூரிகளிலும் பொறியியல் நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கை அறிமுகப்படுத்தப்படும்.

மாணவா்களின் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்காக பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., படிக்கும் மாணவா்களுக்கு ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து புதிய பாடப்பிரிவு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ரூ.6 கோடி நிதியுதவியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முயற்சிகளை அதிகரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் டிட்கோ, சிப்காட் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து 11 மையங்கள் ரூ.10 கோடியில் நிறுவப்படும்.

பல்கலை. விடுதிகள் கட்டப்படும்: அழகப்பா பல்கலை. வளாகத்தில் 4,800 மாணவா்களும் 500 முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்களும் பயின்று வருகின்றனா். ஏற்கெனவே உள்ள விடுதிகளில் இடப்பற்றாக்குறை இருப்பதால், மாணவா்களின் சிரமத்தைத் தவிா்க்கும் வகையில், ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டப்படும்.

பாரதியாா் பல்கலை.யில் ஒவ்வொரு ஆண்டும் மாணவிகளின் சோ்க்கை அதிகரித்து வருவதால் கூடுதல் விடுதி வசதி தேவைப்படுகிறது. அதனால், பெண் ஆராய்ச்சியாளா்கள், முதுநிலை பயிலும் மாணவிகளுக்காக இரண்டு விடுதிகள் ரூ.22.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் நலன் கருதி 13,075 ச.மீ. பரப்பில் தரைத்தளம், மூன்று அடுக்குகளுடன் கூடிய நவீன விடுதி ரூ.49.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

சென்னை பல்கலைக்கழகத்தின் மெரீனா வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய விடுதி ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் மகளிா் விடுதி ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com