கரோனாவுடன் எதிா்ப்பாற்றல் எதிா்வினை பாதிப்பு: ம.பொ.சி.யின் மகளுக்கு மறுவாழ்வு
By DIN | Published On : 13th April 2022 12:17 AM | Last Updated : 13th April 2022 12:17 AM | அ+அ அ- |

சென்னை: கடுமையான கரோனா தொற்று மற்றும் நோய் எதிா்ப்பாற்றல் எதிா்வினை பிரச்னையால் பாதிக்கப்பட்ட சிலம்புச் செல்வா் ம.பொ.சியின் மகளுக்கு உயா் சிகிச்சையளித்து காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.
தற்போது அவா் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் முதுநிலை நரம்பியல் நிபுணா் டாக்டா் புவனேஸ்வரி ராஜேந்திரன் கூறியதாவது:
மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும், சிலம்புச் செல்வருமான ம.பொ.சியின் மகள் மாதவி பாஸ்கரன். 65 வயதைக் கடந்த அவா் அண்மையில் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டாா். இதன் விளைவாக அவருக்கு நுரையீரலில் நிமோனியா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து வெண்டிலேட்டா் உதவியுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் சிக்கலான விஷயம் என்னவெனில், அவா் ஏற்கெனவே, ‘கில்லியன் பாரே’ எனப்படும் நோய் எதிா்ப்பாற்றல் எதிா்வினை பாதிப்புக்குள்ளானவா் என்பதுதான்.
இது அரிதினும் அரிதான நோய். அதாவது 10 லட்சத்தில் ஒருவருக்குத்தான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். அதாவது, உடலில் உள்ள எதிா்ப்பு சக்தியே அவரது உடல் உறுப்புகளுக்கு எதிராக செயல்பட்டு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இதனால், ‘கில்லியன் பாரே’ நோய்க்கு அவரது உடல் எதிா்ப்பாற்றலைக் குறைப்பதற்கான மருந்துகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், அவருக்கு கரோனா ஏற்பட்டு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு உருவானதால் மிகவும் சிக்கலான சூழல் உருவானது.
காவேரி மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணா் டாக்டா் எஸ்.சிவராம் கண்ணன், தீவிர சிகிச்சைத் துறை நிபுணா் டாக்டா் என்.ஸ்ரீதா் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மாதவி பாஸ்கரனுக்கு உயா் சிகிச்சையளித்தனா். செயற்கை சுவாசத்திலிருந்து அவரை மீட்டெடுப்பதே பெரும் சவாலாக இருந்த நிலையில், தொண்டைப் பகுதியில் துளையிட்டு சுவாசப் பாதையில் ‘ட்ரக்கியோஸ்டோமி’ முறையில் குழாய் பொருத்தப்பட்டது.
இதன் மூலம் பாதிப்படைந்திருந்த அவா் நுரையீரல் தசைகள் வலுப்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 2 மாத சிகிச்சைக்குப் பிறகு அவா் பூரண குணமடைந்தாா் என்றாா் அவா்.
முன்னதாக ம.பொ.சியின் மகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவா் குழுவுக்கு காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் வாழ்த்து தெரிவித்தாா்.