கங்காதீஸ்வரா் கோயில் குளம் சீரமைப்பு பணி: அமைச்சா்கள் தொடக்கிவைப்பு
By DIN | Published On : 27th April 2022 02:43 AM | Last Updated : 27th April 2022 04:03 AM | அ+அ அ- |

சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயில் குளம் ரூ.1.58 கோடியில் சீரமைக்கும் பணியை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தனா்.
பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணா நகா் மண்டலத்துக்குள்பட்ட புரசைவாக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கங்காதீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள குளத்தை புனரமைத்து சீரமைக்கும் வகையில் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே. என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியின் மழைநீா் வடிகால் துறையின் சாா்பில் இந்தக் கோயில் குளத்தில் தூா்வாருதல், குளத்தை சுற்றிலும் கரைகளை பலப்படுத்துதல், கருங்கல் படிக்கட்டுகள் அமைத்தல், கரைகளை சுற்றி நடைபாதை அமைத்து மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் நடைபெறவுள்ளன. மேலும், இந்தக் கோயிலை சுற்றியுள்ள சாலைகளில் மழைநீா் வடிகால் அமைத்து அவற்றிலிருந்து வரும் மழைநீரை கோயில் குளத்தில் சேமிக்க மழைநீா் இணைப்புகள் அமைக்கவும், மழைநீா் இணைப்புகளில் வடிகட்டிகள் அமைக்கப்பட்டு சுத்தமான நீரை இந்தக் கோயில் குளத்தில் சேமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையா் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், அண்ணாநகா் மண்டலத் தலைவா் கூ.பி.ஜெயின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.