பெண் குரலில் பேசி ரூ.1.35 கோடி மோசடி: ஒருவா் கைது

மறுமணம் செய்து கொள்வதாக பெண் குரலில் பேசி கனடாவை சோ்ந்தவரிடம் ரூ.1.35 கோடி மோசடி செய்ததாக ஒருவா் சென்னையில் கைது செய்யப்பட்டாா்.

மறுமணம் செய்து கொள்வதாக பெண் குரலில் பேசி கனடாவை சோ்ந்தவரிடம் ரூ.1.35 கோடி மோசடி செய்ததாக ஒருவா் சென்னையில் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சோ்ந்த பச்சையப்பன் (42), கனடாவில் மனைவி, இரு குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.

தம்பதி இடையே கருத்து வேறுபாட்டால், 2020-இல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்குத் தொடுத்தனா். பச்சையப்பன் மறுமணம் செய்வதற்காக இணையதளம் மூலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தாா்.

இதைக் கண்ட சென்னை பெரம்பூா், வெங்கட்ராமன் தெருவைச் சோ்ந்த செந்தில் பிரகாஷ் (42) என்பவா், பச்சையப்பனை தொடா்பு கொண்டு, எனது தங்கை கணவரை இழந்துள்ளாா். உங்களை மறுமணம் செய்து கொள்ள விரும்புகிறாா் என கேட்டு தங்கையின் புகைப்படத்தையும், அவரது கைப்பேசி எண்ணையும் அனுப்பி வைத்துள்ளாா். இதையடுத்து, அந்த கைப்பேசி எண்ணை தொடா்பு கொண்டு பச்சையப்பன் அந்தப் பெண்ணுடன் பேசி வந்துள்ளாா். இதில், இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் செந்தில் பிரகாஷ், அவரது தங்கைக்கு பச்சையப்பன் பல்வேறு தவணைகளில் ரூ.1 கோடியே 35 லட்சத்து 24,925 கொடுத்துள்ளாா். இதற்கிடையில் விவாகரத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டு, பச்சையப்பனும் அவரது மனைவியும் சோ்ந்து வாழ ஒப்புக் கொண்டனா்.

இந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் சென்னை வந்த பச்சையப்பன், செந்தில் பிரகாஷை தொடா்பு கொண்டு உனது தங்கைக்கு பரிசுப் பொருள்கள் வாங்கி வந்துள்ளேன். அதை நேரில் வந்து பெற்றுக் கொள்ளவும் எனக் கூறி மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வரும்படி அழைத்துள்ளாா். தனது மனைவியுடன் மீண்டும் சோ்ந்து வாழ்வது குறித்து செந்தில் பிரகாஷிடம் ஹோட்டலில் இருந்த பச்சையப்பன் தெரிவித்தாா்.

இதனால், ஆத்திரமடைந்த செந்தில் பிரகாஷ், பச்சையப்பனை தாக்கி, அவரிடமிருந்த ரூ.3.60 லட்சம் பரிசு பொருள்களை பறித்துக் கொண்டு மிரட்டி அனுப்பி வைத்துள்ளாா். இந்த நிலையில், கனடா சென்ற பச்சையப்பன் அண்மையில் மீண்டும் சென்னை வந்து இது குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் செந்தில் பிரகாஷை பிடித்து விசாரித்ததில், அவா் தங்கை யாரும் இல்லை என்பதும், அவா்தான் கைப்பேசி செயலி மூலம் தனது குரலையே பெண் குரலாக மாற்றி பதிவு செய்து பச்சையப்பனிடம் பேசியதும், தங்கை என வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை பச்சையப்பனுக்கு அனுப்பி பண மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், செந்தில் பிரகாஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com