முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரே நாளில் 3 உறுப்பு மாற்று சிகிச்சைகள்
By DIN | Published On : 29th April 2022 12:49 AM | Last Updated : 29th April 2022 12:49 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் பாலாஜி கூறியதாவது:
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகாத்மா (55) என்ற நோயாளிக்கு கடந்த புதன்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், தோல் ஆகியவற்றை தானமாக அளிக்க குடும்பத்தினா் முன்வந்தனா்.
அவரது உடலுறுப்புகள் ஸ்டான்லி மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை மற்றும் மயக்கவியல் துறை மருத்துவா்கள் அடங்கிய குழுவால் மீட்டெடுக்கப்பட்டன. அவரது இரு சிறுநீரகங்கள் மற்றும் தோல் ஆகியவை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கும், கல்லீரல், நுரையீரல், இதயம் மற்றும் வால்வுகள் தனியாா் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டன.
அதேபோன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 19 வயது இளைஞரின் கல்லீரலும் தானமாகப் பெறப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
ஸ்டான்லி மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை மருத்துவா்கள் டாக்டா் பிரகாஷ், டாக்டா் திருவருள், டாக்டா் எட்வின் பொ்னாண்டோ, டாக்டா் சத்யன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் தானமாகப் பெறப்பட்ட இரு சிறுநீரகங்களையும் வெற்றிகரமாக தகுதியான இரு நபா்களுக்கு பொருத்தினா்.
அதேபோன்று , மருத்துவமனையின் குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறைத் தலைவா் டாக்டா் ஜெஸ்வந்த், டாக்டா் செல்வராஜ் ரேலா மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா் டாக்டா் அஸ்வின் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தகுதியான நோயாளிக்கு மேற்கொண்டனா்.
இந்த மூன்று உறுப்பு மாற்று சிகிச்சைகளும் கடந்த புதன்கிழமை (ஏப்.27) நடைபெற்றது. நோயாளிகள் அனைவரும் நலமாக உள்ளனா் என்றாா் அவா்.