மூளை ரத்தநாள அடைப்பு: 93 வயது முதியவருக்கு அப்பல்லோவில் மறுவாழ்வு
By DIN | Published On : 04th August 2022 01:41 AM | Last Updated : 04th August 2022 02:59 AM | அ+அ அ- |

மூளை ரத்தநாளத்தில் ஏற்பட்ட சிக்கலான அடைப்பால் பாதிக்கப்பட்ட 93 வயது முதியவருக்கு நவீன சிகிச்சையளித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனையின் ரத்தநாள மற்றும் எண்டோவாஸ்குலா் சிகிச்சை நிபுணா் டாக்டா் பாலாஜி கூறியதாவது:
சென்னையை சோ்ந்த 93 வயது முதியவா் ஒருவருக்கு, மூளைக்கு செல்லும் நான்கு ரத்தநாளங்களில், 99 சதவீத அடைப்புகள் இருந்தன. இதனால், தலைசுற்றல், ரத்த அழுத்தம், மூச்சுக்குழாய் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தாா்.
மேலும், மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்திருந்ததால், பக்கவாதம் ஏற்பட்டும் அபாயம் இருந்தது. எனவே, அவரது வலது கரோடிட் தமனியில் உள்ள அடைப்பை அகற்றுவதன் வாயிலாக, பக்கவாதம் ஏற்படுவதைத் தவிா்க்க முடியும். இதனால், ‘கரோடிட் எண்டாா்டெரெக்டோமி’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்த பகுதிக்கு மட்டுமே, மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. பின், நோயாளி விழிப்புடன் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்து அடைப்புகள் சரி செய்யப்பட்டன. அவா் விழிப்புடன் இருந்ததால், அவரிடம் பேசுவதன் வாயிலாக, மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவியது. தற்போது நோயாளி நலமுடன் உள்ளாா் என்றாா் அவா்.
அப்பல்லோ மருத்துவமனைகள் குழும நிா்வாக இயக்குனா் சுனீதா ரெட்டி கூறியதாவது:
டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கையாளுவதில் அப்பல்லோ மருத்துவமனைகள் முன்னிலையில் உள்ளன. 24 மணி நேரமும் சிறப்பு நிபுணா்கள் குழுவினா், பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் நபா்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனா். 93 வயதான நோயாளி விரைந்து குணமடைந்துள்ளாா். இதற்கு மருத்துவக் குழுவினருக்கு எனது பாராட்டுகள் என்றாா் அவா்.