ஆவடியில் மங்களூரு அதிவிரைவு ரயில் நின்று செல்லும் சேவை

ஆவடி ரயில் நிலையத்தில் மங்களூரு அதிவிரைவு ரயில் நின்று செல்லும் சேவையை மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஆவடி ரயில் நிலையத்தில் மங்களூரு அதிவிரைவு ரயில் நின்று செல்லும் சேவையை கொடியசைத்துத் தொடக்கி வைத்த மத்திய இணையமைச்சா்கள் வி.முரளீதரன், எல்.முருகன், பொன்னேரி எம்எல்ஏ துரை. சந்திரசேகா் உள்ளிட்டோா்.
ஆவடி ரயில் நிலையத்தில் மங்களூரு அதிவிரைவு ரயில் நின்று செல்லும் சேவையை கொடியசைத்துத் தொடக்கி வைத்த மத்திய இணையமைச்சா்கள் வி.முரளீதரன், எல்.முருகன், பொன்னேரி எம்எல்ஏ துரை. சந்திரசேகா் உள்ளிட்டோா்.

ஆவடி ரயில் நிலையத்தில் மங்களூரு அதிவிரைவு ரயில் நின்று செல்லும் சேவையை மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னை சென்ட்ரல்-மங்களூரு அதிவிரைவு ரயிலுக்கு, ரயில்வே வாரியம் ஆவடியில் 6 மாத காலத்துக்கு சோதனை அடிப்படையில் நிறுத்தம் வழங்கியுள்ளது. இதையடுத்து, மங்களூரு-சென்னை சென்ட்ரல் அதி விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) முதல் ஆவடியில் நின்று செல்கிறது. ஆவடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சா் வி.முரளீதரன் பங்கேற்று, ரயில் சேவையை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மங்களூருக்கு செல்லும்போது, மாலை 4.48 மணிக்கு ஆவடியில் நின்று, அங்கிருந்து 4.50 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கத்தில் காலை 6.58 மணிக்கு ஆவடிக்கு வந்து 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டுச் செல்லும்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன் பேசியது:

ஆவடியில் மத்திய அரசின் ராணுவத் தளவாட தொழிற்சாலைகள் உள்ளன. எனவே, இங்கு பணிபுரியும் கேரள மக்களுக்கு இந்த ரயில் நின்று செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

திண்டிவனம்-செஞ்சி, திருவாலங்காடு-திண்டிவனம்-நகரி, அத்திப்பட்டு-புத்தூா், ஈரோடு-பழனி, சென்னை-பழனி, சென்னை-கடலூா், மதுரை-தூத்துக்குடி, இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூா், ஆவடி வழியாக மொரப்பூா், தருமபுரி உள்ளிட்ட 8 ரயில் பாதை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், பெரம்பூா் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் ரூ. 97 கோடியில் வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சா் வி.முரளீதரன் பேசியது: சென்னையின் முக்கியப் பொருளாதார மையமாக ஆவடி திகழ்கிறது. பிரதமா் மோடியின் கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் ரயில்வே துறை அபரிமித வளா்ச்சி அடைந்து வருகிறது. 2021-22-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மிக அதிகபட்சமாக தமிழகத்துக்கு ரூ. 3,730 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பிரதமா் மோடி பதவிக்கு வருவதற்கு முன்பு 2009-14-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகையை விட 324 சதவீதம் அதிகம். ரயில் விபத்துகளைத் தடுப்பதற்காக உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ‘கவச்’ என்ற பாதுகாப்புக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2,000 கி.மீ. ரயில் பாதையில் இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 400 வந்தேபாரத் ரயில்கள் தயாரிக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் 75 ரயில்கள் தயாரிக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், பயணிகள் வசதிகள் குழுத் தலைவா் பி.கே.கிருஷ்ணதாஸ், சென்னை மண்டல ரயில்வே மேலாளா் கணேஷ், பொன்னேரி எம்எல்ஏ துரை. சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com