300 ஆண்டுகள் பழைமையான இரு சிலைகள் மீட்பு
By DIN | Published On : 31st August 2022 03:45 AM | Last Updated : 31st August 2022 03:45 AM | அ+அ அ- |

சென்னை அண்ணாநகரில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இரு சிலைகள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டன.
அண்ணாநகர், 5ஆவது பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டில் பழைமையான சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி ஆர்.தினகரன் ஆகியோர் உத்தரவின்பேரில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். இதில் வீட்டில் 54 செ.மீ. உயரமும், 40 கிலோ எடையும் உள்ள அமர்ந்த நிலையில் இருக்கும் மாரியம்மன் சிலை, 54 செ.மீ. உயரமும்,13 கிலோ எடையும் உள்ள நடராஜர் சிலை ஆகியவை இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக, அந்த வீட்டில் இருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை செய்தபோது, தங்களது பெற்றோர் காலத்திலிருந்தே இந்த சிலைகள் வீட்டில் இருப்பதாக கூறினராம். சிலை எவ்வாறு அவர்களுக்கு கிடைத்தது என்பது குறித்த ஆவணங்கள் அவர்களிடம் இல்லை எனக் கூறப்படுகிறது.
போலீஸார், அந்த சிலைகளை பரிசோதித்தபோது திருவிழாக் காலங்களில் கோயில் பல்லக்குகளில் எடுத்துச் செல்வதற்காக அவற்றை பொருத்துவதற்கான அடையாளங்கள், சிலைகளில் இருந்தன. இதன் மூலம், அந்த சிலைகள் ஏதோ ஒரு கோயிலுக்கு சொந்தமானதுதான் என்பதை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் உறுதி செய்தனர். இதையடுத்து, இரண்டு சிலைகளையும் பறிமுதல் செய்தனர்.
300 ஆண்டுகள் பழைமையானது: இந்த சிலைகள் எந்தெந்த கோயில்களிலிருந்து திருடப்பட்டது, திருடியது யார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இரு சிலைகளின் தொன்மை குறித்து தொல்லியல்துறை நிபுணர் ஸ்ரீதரன் ஆய்வு மேற்கொண்டார். இதில் இரு சிலைகளும் 300 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை என்பதும், இதன் சர்வதேச சந்தையில் பல கோடி மதிப்புடையது என்பதும் தெரியவந்தது.
இந்த வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரை, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு பாராட்டினார்.