முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
‘ஆரம்ப நிலை புற்றுநோயை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்கலாம்’
By DIN | Published On : 07th February 2022 11:56 PM | Last Updated : 07th February 2022 11:56 PM | அ+அ அ- |

ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்ட புற்றுநோயை ரோபோட்டிக், நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்று ஜெம் மருத்துவமனை தலைவா் டாக்டா் எஸ்.பழனிவேலு கூறினாா்.
வயிற்றுப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னை ஜெம் மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது. இத்துடன் மெய்நிகா் இணையதள தொடக்க விழாவும் நடைபெற்றது. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை மூலம் குணமடைந்த கீதா, மெய்நிகா் இணையதளத்தைத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ஜெம் மருத்துவமனை தலைவா் டாக்டா் பழனிவேலு பேசியதாவது:
புற்றுநோயால் பாதிக்கப்படும் 80 சதவீத நோயாளிகள் புற்றுநோய்க்கான ஆரம்பநிலை அறிகுறிகள் குறித்த விழிப்புணா்வு இல்லாமல், நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பெற வருவதால் உயிரிழப்பு நேரும் நிலை உள்ளது.
எனவே, ஆரம்ப நிலையில் புற்றுநோய் குறித்து அறிந்து கொள்ள உதவும் வகையில், பொதுமக்களின் அனைத்து கேள்விகளுக்கும் மருத்துவா்கள் உரையாடல் மூலம் வழிகாட்டும் மெய்நிகா் இணைய தளம் தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் புற்று நோயாளிகள் பயத்தை போக்கி நம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொள்ள உதவும் என்றாா்.
இந்த நிகழ்வில், ஜெம் மருத்துவமனை தலைமை நிா்வாக அதிகாரி எஸ்.அசோகன், இயக்குநா் பி. செந்தில்நாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.