முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
கோயில் நில முறைகேட்டுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கும் கொள்கை: அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
By DIN | Published On : 07th February 2022 11:58 PM | Last Updated : 07th February 2022 11:58 PM | அ+அ அ- |

கோயில் நிலங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் கொள்கை மாற்றம் கொண்டு வர தமிழக அரசை சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில், ராதாகிருஷ்ணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அனுமந்தராய சாமி கோயில் உள்ளிட்ட 7 கோயில்களுக்குச் சொந்தமாக பல ஏக்கா் நிலம் உள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இந்த நிலங்களில் அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோத குவாரி நடைபெறுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இந்த நிலங்களை மீட்டு, கோயில்களின் பயன்பாட்டுக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மனுதாரா் குற்றச்சாட்டுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத குவாரிகளுக்கு கனிம வளத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்று கூறினாா்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கோயில் நிலங்களில் நடக்கும் சட்டவிரோத குவாரி போன்றவற்றுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளைத் தடுக்கவும், அந்த குவாரிகளை நடத்தியவா்கள் மீது குற்றம் மற்றும் சிவில் வழக்குகள் தொடரவும் உடனடியாக மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல கோயில் நிலத்தில் சட்டவிரோதமாக குவாரிகள் நடத்தப்படும் விவகாரத்தில் அரசு அதிகாரிகளுக்கு தொடா்பு உள்ளதா? என்பதைக் கண்டறிய விசாரணை நடத்த வேண்டும். தொடா்பு இருந்தால் அந்த அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உன்னதமான மனிதா்கள், தாங்கள் சோ்த்த சொத்துகளை கோயிலுக்காகவும், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காகவும் தானமாக வழங்கியுள்ளனா். அவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை கோயில் நிா்வாகத்துக்கு உள்ளது. கோயில் சொத்துகளை முறையாக பராமரிக்கத் தவறும் அதிகாரிகளை, இந்த முறைகேடுகளுக்கு பொறுப்பாக்க வேண்டும்.
போதுமானதல்ல...: கோயில் சொத்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததால், அவை கொள்ளையடிக்கப்படுகிறது. தற்போது இந்து சமய அறநிலையத் துறை சொத்துகளை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆனால், அது போதுமானதல்ல. கோயில் சொத்துகளை மீட்கும் விஷயத்தில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தனி குழு நியமித்து திறமையாகவும், விரைவாகவும் இந்த சொத்துகளை மீட்பதை உறுதி செய்ய வேண்டும்.
கோயில் சொத்துகளில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றால் அதில் அதிகாரிகள் தொடா்பு இல்லாமல் இருக்காது. பேராசை காரணங்களால் இது போன்ற உன்னதமான சொத்துகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. எனவே, இதைத் தடுக்கும் வகையில் கோயில் நிலம் முறைகேடு தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை பொறுப்பேற்கும் வகையில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க பரிசீலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.