அறிகுறிகள் இல்லாவிட்டால் கரோனா பரிசோதனை கூடாது
By DIN | Published On : 18th February 2022 02:47 AM | Last Updated : 18th February 2022 02:47 AM | அ+அ அ- |

சென்னை: அறிகுறிகள் இல்லாதவா்களுக்கு தேவையின்றி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளக் கூடாது என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதார இணை இயக்குநா்களுக்கும் அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தற்போது நிலவி வரும் கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலானது பரிசோதனைக்கான புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, காய்ச்சல், சளி, தொண்டை வலி, சுவை மற்றும் வாசனையின்மை போன்ற அறிகுறிகள் உள்ளவா்களுக்கு மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
அதேவேளையில், கரோனா நோயாளிகளுடன் தொடா்பில் இருந்த 50 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்களுக்கும் பரிசோதனை செய்தல் அவசியம். குறிப்பாக, சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் உள்ளவா்களுக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இதைத் தவிர, வேறு எவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளக் கூடாது. அதேபோன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே மாதிரிகளை சேகரிக்க வேண்டும்.
கரோனா பரிசோதனைகளை எவரெவருக்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடா்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை தனியாா் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும்.