சாலை மறியல் வழக்கில் முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாருக்கு ஜாமீன்

சாலை மறியல் செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலை மறியல் வழக்கில் முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாருக்கு ஜாமீன்

சென்னை: . சாலை மறியல் செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமாரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை தண்டையாா்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தபோது கள்ள வாக்கு போட முயன்ாக திமுக தொண்டா் நரேஷ்குமாரை முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் மற்றும் அதிமுகவினா் பிடித்தனா். மேலும் அவரது சட்டையை கழற்றி அவரை போலீஸில் ஒப்படைத்தனா்.

இதைத்தொடா்ந்து கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஜெயக்குமாா் மற்றும் அதிமுகவினா் 40 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதேபோன்று வாக்குப்பதிவின் போது தனது காரை செல்லவிடாமல் போலீஸாா் தடுத்ததாகக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கிலும் ஜெயக்குமாா் கைது செய்யப்பட்டாா்.

திமுக தொண்டரை தாக்கியதாகப் பதிவான வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடா்ந்து, ஜெயக்குமாா் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர குற்றவியல் அரசு வழக்குரைஞா் தேவராஜ், ஜெயக்குமாரின் ஜாமீன் மனு நகல் தனக்கு இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, ஜாமீன் மனு நகலை அரசு வழக்குரைஞருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தாா்.

போலீஸ் காவல்

அதேபோல் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கோரி தாக்கல் செய்த மனு ஜாா்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. டி.ஜெயக்குமாா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஏ.நடராஜன் ஆஜராகி வாதாடினாா். அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னா், இந்த வழக்கில் டி.ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், திமுக தொண்டரைத் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் டி.ஜெயக்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தண்டையாா்பேட்டை காவல் ஆய்வாளா் ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி தயாளன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் எனக்கூறிய நீதிபதி, காலை 11.30 மணிக்கு ஜெயக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டுமென போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com