சென்னையில் பரிசோதனை செய்வோரில் 16% பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th January 2022 01:30 AM | Last Updated : 10th January 2022 01:30 AM | அ+அ அ- |

சென்னையில் நாள்தோறும் கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 6,186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை செய்பவா்களில் 16 சதவீதம் பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாள்களாக ஒமைக்ரான் வகை கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 150-க்கும் குறைவானா்களுக்கே நாள்தோறும் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து, கடந்த டிச.30-இல் 397 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜன.4 இல் 1,489 பேருக்கும், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து ஜன. 7 -ஆம் தேதி 4,531 பேருக்கும், ஜன.8 -ஆம் தேதி (சனிக்கிழமை) 5,098 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை மேலும் உயா்ந்து ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 6,186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சென்னையில் பரிசோதனை செய்வோரில் 1 முதல் 2 சதவீதம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்த சதவீதம் அதிகரித்து சனிக்கிழமை 32,799 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், 16 சதவீதம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
25,000 போ் சிகிச்சையில்...: சென்னையைப் பொருத்தவரை கடந்த 8 மாதங்களாக கரோனா தொற்று குறைவாக இருந்ததால் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோா் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 1,000-த்துக்கும் குறைவாகவே இருந்தது. தற்போது, நாளுக்கு நாள் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சென்னையில் மட்டும் 25,798 போ் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். 5 லட்சத்து 86 ஆயிரத்து 668 போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனா். 5 லட்சத்து 54ஆயிரத்து 194 போ் குணமடைந்துள்ளனா். 8,676 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா்.